கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா முறையில் சிகிச்சையளிக்க சம்மதம் தெரிவித்த அமெரிக்கா!
![](https://thambattam.com/storage/2020/08/dsfg-780x470.jpg)
அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளுக்கு பிளாஸ்மா முறையில் சிகிச்சை அளிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு (எப்.டி.ஏ.), அவசரகால ஒப்புதல் அளித்துள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 1,80,604 பேர் பலியாகியுள்ளனர். 57 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 31 லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவை பாதிக்கப்பட்டோருக்கு செலுத்தி சிகிச்சை அளிக்க மருத்துவ வல்லுநர்கள் பரிந்துரைத்துள்ளனர். இம்முறையில் பிளாஸ்மாவை செலுத்தும் போது உடலில் நோயெதிர்ப்பு அணுக்கள் அதிகரித்து கொரோனா தொற்றை எதிர்த்து போரிட உதவி புரிகிறது.
கடந்த 22ம் தேதி, சில அரசியல் காரணங்களுக்காக கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறைகளை வெளியிட எப்.டி.ஏ. தடையாக இருப்பதாகவும், ஆனால், பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனா உயிரிழப்புகள், 35 சதவீதம் குறைந்திருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தற்போது, அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பின் (எப்.டி.ஏ.,) இயக்குனர் பீட்டர் மார்க்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆரம்பகால ஆராய்ச்சியில் பிளாஸ்மா சிகிச்சை அளிப்பதால், இறப்பு விகிதத்தை குறைத்து, நோயாளியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் எனக் கண்டறியப்பட்டது. கடந்த சில மாதங்களில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் விரிவான ஆய்வுக்கு பின், பிளாஸ்மா சிகிச்சை முறை, மிகப் பாதுகாப்பானது எனத் தெரியவந்துள்ளது. பிளாஸ்மா சிகிச்சையில் அபாயத்தையும் விட நன்மைகள் அதிகமாக இருக்கிறது.” இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் பேசிய டிரம்ப், “இதைத்தான் நீண்ட காலமாக செய்ய எதிர்பார்த்திருக்கிறேன். எண்ணற்ற உயிர்களை பலி கேட்கும் சீனா வைரஸுக்கு எதிரான எங்கள் போரில் உண்மையிலேயே வரலாற்று அறிவிப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சியடைகிறேன். இது ஒரு சக்திவாய்ந்த சிகிச்சை. கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அமெரிக்கர்கள், பிளாஸ்மாவை தானம் செய்ய முன்வர வேண்டும்.” என்றார்.