“மேகதாதுவில் அணை கட்ட மத்திய, மாநில அரசுகள் அனுமதிக்க கூடாது!” தமிழக விவசாயிகள் கோரிக்கை!
![](https://thambattam.com/storage/2020/08/30111802.jpg)
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுக்கும் முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும் என்று டெல்டா பாசன விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள கிருஷ்ணசாகர் அணையில் அண்மையில் சிறப்பு வழிபாடு நடத்திய அம்மாநில முதலமைச்சர் எடியூரப்பா, மேகதாது அணை கட்ட மத்திய அரசிடம் விரைவில் ஒப்புதல் பெறுவோம் என்று கூறியிருந்தார். அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழக டெல்டா பாசன விவசாயிகள், கர்நாடகத்தின் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கக்கூடாது என்பது தமிழக விவசாயிகளின் கோரிக்கை. இதுகுறித்து டெல்டா பாசன விவசாயிகள் தெரிவித்ததாவது, “கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ஆவணங்களை தயாரித்து வருகிறார்கள். இந்த முடிவுக்கு மத்திய, மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்து அணையை கட்டாமல் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். தற்போது சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனில் விவசாயிகளான தாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.” என குறிப்பிட்டுள்ளனர்.
மேகதாது அணை கட்டுவதற்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க கர்நாடக அரசுக்கு கடந்த 2018ல் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதனை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனிடையே மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்ற எடியூரப்பாவின் ஆணவப்பேச்சு விவசாயிகளிடம் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.