ராகுல் காந்தியின் விளக்கத்தை ஏற்று, தன் கருத்தை திரும்ப பெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல்!

மூத்த தலைவர் சிலர் பாஜகவுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக தான் ஒருபோதும் கூறவில்லை என ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் விளக்கம் அளித்ததைத் தொடர்ந்து ட்விட்டரில் தான் தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெறுவதாக மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு நிலையான, முழுநேரத் தலைமை தேவை எனக்கோரி கட்சியில் உள்ள 23 மூத்த தலைவர்கள் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியிருந்தார்கள். அந்த கடிதம் எழுதியவர்களில் குலாம் நபி ஆசாத், கபில் சிபல் உள்ளிட்டோரும் அடங்கும். இந்நிலையில் தலைமை குறித்து சர்ச்சை எழுந்ததையடுத்து, அது குறித்து விவாதிக்க காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் இன்று காணொலி வாயிலாகக் கூடியது.

அப்போது கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தான் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறி பொதுச்செயலாளர் வேணுகோபாலிடம் கடிதம் அளித்து, விரிவாக விளக்கம் அளித்தார். மேலும், புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பணிகளைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். ஆனால், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோனி ஆகியோர் சோனியா காந்தியே தலைவராகத் தொடர வேண்டும் என வலியுறுத்தி, தலைமையை விமர்சித்து கடிதம் எழுதிய 23 பேரையும் விமர்சித்தனர்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, “தனது தாய் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டபோது 23 தலைவர்களும் கடிதம் எழுத வேண்டிய நோக்கம் என்ன?, தவறான நேரத்தில் எழுதப்பட்ட கடிதத்தின் மூலம் பாஜவுடன் கூட்டு சேர்ந்து செயல்படுகிறார்களா?” என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து, கபில் சிபல் தனது ட்விட்டரில் ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்து கருத்துக்களை பதிவிட்டார். அதில் “பாஜகவுடன் கூட்டுவைத்துக்கொண்டா ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்காக வாதிட்டு வெற்றிபெற்றோம். மணிப்பூரில் பாஜக அரஸை இறக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாதிட்டுத்தானே அரசை இறக்கினோம். கடந்த 30 ஆண்டுகளில் பாஜகவுக்கு ஆதரவாக எந்த விஷயத்திலும் கருத்து தெரிவித்தது இல்லை. ஆயினும் நாங்கள் பாஜகவுடன் கூட்டு வைக்கிறோம்!” எனத் தெரிவித்திருந்தார்.

இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் மூத்த தலைவர்களுக்கும், ராகுல் காந்திக்கும் இடையே பிளவு ஏற்பட்டு, கருத்து மோதல் ஏற்பட்டதாக தகவல் வெளியாகின. ஆனால், சிறிது நேரத்தில் தன் ட்விட்டர் கருத்துக்களை கபில் திரும்பப் பெற்றுக் கொண்டார். அதன்பின் அவர் பதிவிட்ட கருத்தில் “தனிப்பட்ட முறையில் ராகுல் காந்தி என்னிடம் விளக்கம் அளித்தார். அதில் தான் ஒருபோதும் தங்களைக் குறிப்பிடவில்லை எனத் தெரிவித்ததால், நான் எனது ட்விட்டை திரும்பப் பெற்றுக் கொண்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x