“விஜய் சேதுபதியின் குடும்பத்தை ஆபாசமாக பேசியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” – அமைச்சர் பாண்டியராஜன்

நடிகர் விஜய் சேதுபதியின் குடும்பத்தை ஆபாசமாக பேசி மிரட்டல் விட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆவடி தொகுதிக்குட்பட்ட திருநின்றவூர் பிரகாஷ் நகர் மற்றும் வடக்கு பிரகாஷ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சாலை மற்றும் மழைநீர் கால்வாய் பணிகளை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வு செய்தார். அப்போது மழைநீர் கால்வாய் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் எனவும் சாலைகளை உடனடியாக சீர் செய்ய வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதோடு அப்பகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நடிகர் விஜய்சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தாரை மிரட்டியது மிகவும் கண்டிக்கத்தக்கது. அதிமுகவை பொருத்தவரை நடிகர் விஜய்சேதுபதியின் நடிப்பு சுதந்திரத்தை தடுக்கவில்லை. இந்த படத்தில் நடிக்காமல் இருப்பது அவருடைய புகழுக்கு நல்லது என்று கூறியதாக தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஏதோ ஒரு நபர் செய்துள்ளது மிகவும் தரம் தாழ்ந்தது. அதை வன்மையாக கண்டிக்கிறோம். இதில் தொடர்புடைய நபர் எவ்வளவு பெரிய அந்தஸ்தில் இருந்தாலும் அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். வருகின்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெறாது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியதற்கு பதிலளித்த அவர், அதிமுக ஆட்சியில் மக்களுக்கு செய்த நன்மைகளை கண்டு விரக்தியில் பேசுவதாக தெரிவித்தார்.