மும்பையில் நடைபாதை பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் மீது பாய்ந்த கார்: 4 பேர் உடல் நசுங்கி பலி

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில், சாலையில் சென்று கொண்டிருந்த கார் எதிர்பாராத விதமாக நடைபாதை பகுதியில் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதிய விபத்தில், 4 பேர் உடல் நசுங்கி பலியாகினர்.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள க்ரவ்போர்ட் சந்தைப்பகுதியில், கபே ஜனதா என்ற உணவக விடுதி உள்ளது. இந்த உணவகத்திற்கு அருகே உள்ள நடைபாதையில், நேற்று இரவு வழக்கம்போல பலர் அமர்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் வேகமாக வந்த கார், நடைபாதையில் அமர்ந்திருந்தவர்கள் மீது மோதியது. இந்த கோர விபத்தில், கார் ஓட்டுனர் உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.