5 பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் விற்பனைக்கு

நடப்பு நிதியாண்டில், எஸ்.பி.ஐ., பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, யூனியன் வங்கி உள்ளிட்ட, ஐந்துக்கும் மேற்பட்ட வங்கிகள், தங்களுடைய பங்குகளை, நிறுவன முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்ய உள்ளன.
பொதுத்துறையை சேர்ந்த வங்கிகள், நடப்பு நிதியாண்டில், தங்களுடைய மூலதனத்தை அதிகரித்துக் கொள்ளும் வகையில், பங்குகள் விற்பனையில் இறங்க முடிவு செய்துள்ளது. இரண்டாவது காலாண்டு நிதி நிலை அறிக்கைகளை இறுதி செய்த பிறகு, தங்களுடைய பங்குகளை, தகுதி வாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்து, நிதியை திரட்டும் என துறை சார்ந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
நான்கிலிருந்து ஐந்து வங்கிகள், மூன்றாம் காலாண்டு இறுதியிலோ, அல்லது கடைசி காலாண்டிலோ இந்த முயற்சிகளில் இறங்கும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தகுதி வாய்ந்த முதலீட்டு நிறுவனங்கள் மூலம் நிதியை திரட்ட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், தனியார் துறையை சேர்ந்த, ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கி, ஆக்சிஸ் வங்கி, கோட்டக் மகிந்திரா வங்கி ஆகியவை, தகுதி வாய்ந்த முதலீட்டாளர்கள் மூலம் தங்களுடைய மூலதனத்தை அதிகரித்துக் கொண்டது.
எஸ்.பி.ஐ., 20 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டவும், பஞ்சாப் நேஷனல் வங்கி 7 ஆயிரம் கோடி ரூபாய் நிதி திரட்டவும் அனுமதி பெற்றுள்ளன. சந்தையிலிருந்தே வங்கிகள் தேவையான மூலதனத்தை திரட்டிக் கொள்ளும். அரசை அணுக வேண்டிய தேவை இல்லை என பி.என்.பி தலைவர் கூறியுள்ளார். பி.என்.பியின் 85% பங்குகள் அரசின் வசம் உள்ளது.