தனக்கு வந்த திருமண வரன்களைத் தடுத்தவரின் கடையை ஜேசிபி மூலம் தரைமட்டமாக்கிய கேரள இளைஞர்!!

தனக்கு வந்த திருமண வரன்களைத் தடுத்த கடைக்காரரின் கடையை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் தரைமட்டமாக்கிய கேரள இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தின் சேருபுழா பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பின் மேத்யூ. 30 வயதான இவருக்கு நீண்ட வருடங்களாக திருமணம் நடைபெறாமல் இருந்துள்ளது.
இந்நிலையில் திங்கள்கிழமை விடியோ வெளியிட்ட மேத்யூ தனது திருமணங்களை மளிகைக் கடைக்காரர் தடுத்து நிறுத்தி வருவதாகக் குறிப்பிட்டு பேசியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜேசிபி இயந்திரத்தின் மூலம்அந்தக் கடையை தரை மட்டமாக்கி அதனை சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
மேலும் தனது விடியோவில் அவர், அந்த மளிகைக்கடை சட்ட விரோதமாக சூதாட்டம் மற்றும் மதுபான விநியோகம் ஆகியவற்றில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்த மேத்யூ, இதனால் இந்தப் பகுதி இளைஞர்களான நாங்கள் வருத்தப்படுகிறோம் எனவும் இதுகுறித்து புகார் தெரிவித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
மேத்யூவின் இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சட்டவிரோதமாக கடையை இடித்ததற்காக மேத்யூவை காவலர்கள் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.