“நீட் தேர்வு விவகாரத்தில் தமிழக அரசு மவுனம் காப்பது ஏன்?” திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி!!

சட்டசபையை கூட்டி, நீட் தேர்வை நடத்த முடியாது என பிரகடனப்படுத்த வேண்டும் என அவர் அதிமுக அரசிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக்கோரி, இரு சட்ட மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்ட மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதில், பா.ஜ.க.வுடன் கூட்டணி என்று சொல்லிக் கொண்டே, அ.தி.மு.க. அரசு பரிதாபமாகப் படுதோல்வி அடைந்து விட்டது. கொரோனா பெருந்தொற்று மக்களை வாட்டி வதைத்து வரும் தருணத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோர் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

ஆனால், கொள்கை அளவில் நீட் தேர்வை ஏற்றுக் கொள்ளாத தமிழ்நாடு அரசோ, முதல்வரோ இந்தத் தலையாய பிரச்னையில் கவனம் செலுத்தாமல் பாராமுகமாக இருந்து வருவதில் இருந்தே அவர்களுடைய உள்நோக்கம் ஊருக்குத் தெரிந்துவிட்டது. தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, நீட் தேர்வை நிராகரித்து, பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பிரகடனப்படுத்தி, நமது கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு ஏற்கச்செய்து, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகிறேன்.

நீட் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவதில் அடைந்த படுதோல்வியை மூடிமறைக்க, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூலை மாதம் தமிழக அமைச்சரவை கூடி நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன என்பது இதுவரை புதிராகவே இருக்கிறது. “இது குறித்து அவசரச் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்று முதல்வர் நேற்று திடீரென அறிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் குறட்டை விட்டது ஏன்?.

ஏழு தமிழர்களை விடுவிப்பது தொடர்பான கோப்புகள் ஆளுநர் மாளிகையில் பல ஆண்டுகளாகக் குளிர்பதனப் பெட்டியில் தூங்கிக் கொண்டிருப்பதைப் போல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு முடிவும் அமைந்துவிடத் தமிழக அரசு அனுமதிக்கப் போகிறதா அல்லது  மாநில அரசின் உரிமையைச் சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து தட்டிக் கேட்கப்போகிறதா என்பதைத் தெரிந்துகொள்ளத் தமிழ்நாடே ஆவலாக இருக்கிறது.

பல்லாயிரம் கோடி டெண்டர், கொள்முதல் விவகாரங்களில் ஒவ்வொரு மாவட்டமாக ஓடோடிச் சென்று காட்டும் தீவிரத்திலும் அக்கறையிலும் கோடியில் ஒரு பங்கையேனும் மாணவர்கள் நலனில் காண்பிக்க முதலமைச்சர் பழனிசாமி முன்வர வேண்டும். இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x