புல்வாமா தாக்குதல்: ஓராண்டுக்கு பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது என்.ஐ.ஏ.,

புல்வாமா தாக்குதல் சம்பவத்தில், 13 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை ஜம்மு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் உட்பட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா என்ற இடத்தில் C.R.P.F வீரர்கள் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், தாக்குதல் சம்பவம் தொடர்பாக 13 ஆயிரத்து 500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை, ஜம்மு நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு நேற்று தாக்கல் செய்தது.
அதில், ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் உட்பட பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட வாகனத்தின் புகைப்படமும் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது.