கேரள தலைமை செயலகத்தில் திடீர் தீ விபத்து: தங்கக்கடத்தல் வழக்கு ஆவணங்களை அழிக்க திட்டம் என எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

தங்கக் கடத்தல் தொடர்பான ஆவணங்களை அழிப்பதற்காக, திட்டமிட்டு கேரள தலைமைச் செயலகத்துக்கு தீ வைக்கப்பட்டதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள தலைமைச் செயலக கட்டடத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதில் சில ஆவணங்கள் எரிந்து சேதமடைந்தன. இந்நிலையில், ஆளும் கட்சியினர், தீ விபத்து நாடகத்தை நடத்தி, அதன் மூலம் தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய ஆவணங்களை அழிக்க முயற்சி செய்ததாக, பா.ஜ.க., மற்றும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டினர்.

இந்த தீ விபத்துக்கு முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் தலைமைச் செயலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும், இது தொடர்பாக ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடமும் புகாரளித்தன. இதற்கிடையே தீ விபத்து குறித்து விசாரணை நடத்த, தலைமை செயலாளர் விஷ்வாஸ் மேத்தா உத்தரவிட்டுள்ளார்.