பலத்த பாதுகாப்புடன் மணலியில் இருந்து நாளை ஐதராபாத்திற்கு செல்ல இருக்கும் அம்மோனியம் நைட்ரேட்!!

கரூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்துவதாகக் கூறி 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட்டை 2015ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்தது. ஆனால், அந்த தனியார் நிறுவனத்திடம் தகுந்த உரிமம் இல்லை என்றுகூறி இறக்குமதி செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை சுங்கத் துறை பறிமுதல் செய்தது.

பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் தற்போது மணலியில் உள்ள சுங்கத் துறையின் வேதிப் பொருட்களுக்கான கிடங்கில் 37 கண்டெய்னர்களில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக சேமித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து தனியார் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கில் 2019 நவம்பர் மாதம் அளித்த தீர்ப்பில் அம்மோனியம் நைட்ரேட் முழுவதையும் மின்னணு ஏலத்தில் விட சுங்கத்துறை அறிவுறுத்தியது.

இதனால், பறிமுதல் செய்யப்பட்ட அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விட முடிவு செய்யப்பட்டது. அந்தப் பணிகள் துவங்காமல் இருந்த நிலையில், தற்போது லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடந்த விபத்தின் மூலம் மணலியில் உள்ள 740 டன் அம்மோனியம் நைட்ரேட்டை ஏலம் விட உடனடியாக முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் தற்போது ஐதராபாத் நிறுவனத்திற்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. ஐதராபாத் செல்லவுள்ள 10 கன்டெய்னர்களும், வேதி கிடங்கு அதிகாரிகள் முன்னிலையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஐதராபாத்திற்கு நாளை அனுப்பி வைக்கப்பட உள்ளது.