தமிழக வௌவால்களுக்கு கொரோனா!

புதுடெல்லி: கொரோனா பரவல் குறித்து 7 மாநிலங்களில் ஆய்வு செய்யப்பட்டதில் தமிழகம் உள்பட 4 மாநில வௌவால்களில் கொரோனா தொற்று இருப்பதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவல் தெரிவித்துள்ளது.
அந்த ஆய்வில், “ வௌவால்கள் பாலூட்டிகள் என்பதால் அவை மனிதர்களுக்கு நேரடியாகவோ அல்லது வேறு சில விலங்குகளின் மூலமாகவோ கொரோனாவை பரப்பி இருக்கலாம்.
ஏழு மாநிலங்களைச் சேர்ந்த, இரண்டு வகையான வௌவால்களின் தொண்டையில் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. அதில், கேரளா, இமாச்சலப் பிரதேசம், புதுச்சேரி, தமிழ்நாடு ஆகிய 4 மாநிலங்களின் உள்ள இரண்டு வகையான வௌவால்களில் கொரோனா வைரஸ்கள் உள்ளன.
கர்நாடகா, சண்டிகர், குஜராத், ஒடிசா, பஞ்சாப், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் வௌவால்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை.
கொரோனா வைரஸை வௌவால்கள், வேறு விலங்குகளுக்கு பரப்பி, அதன்மூலம் மனிதர்களுக்கு தொற்றை ஏற்படுத்த வல்லன. எனவே, வௌவால்களில் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட மாநிலங்களில், மனிதர்களுக்கும், செல்லப் பிராணிகளுக்கும் கொரோனா வைரஸிற்கான எதிர்புரதப் பரிசோதனை (Antibody testing) பரவலாக மேற்கொள்ளப்பட வேண்டும்.
இதுதவிர, பல்வேறு உயிரினங்களில் தொற்று உள்ளதா என்று ஆய்வு செய்ய, வனவிலங்குத் துறை, கால்நடை மருத்துவத் துறை, கோழிப்பண்ணைத் துறை, நலவாழ்வுத் துறை ஆகியன புதிய உத்திகளைக் கண்டறிய வேண்டும். குறிப்பாக, கேரளாவில் பல்வேறு வகையான வௌவால்கள் வாழ்வதால் அங்கு கூடுதல் கவனம் தேவை.
இவ்வாறு மருத்து கவுன்சில் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
நிபா வைரஸ் தொற்று ஏற்பட்ட பொழுது வௌவால்களுக்கு RT- PCR (Reverse Transcription Polymerase Chain Reaction) மேற்கொள்ளப்பட்டு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.