நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய 7 மாநில முதல்வர்கள் முடிவு!!

நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட 7 மாநிலங்களின் முதல்வர்கள் முடிவு செய்துள்ளனர்.
நீட், ஜேஇஇ தேர்வுகள், மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி நிலுவை தொகை வழங்காதது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மாநில முதல்வர்களுடன் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களான அமரீந்தர்சிங், அசோக் கெலாட், பூபேஷ் பாகல், நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, “கொரோனா லாக்டவுன் காலத்தில் நீட், ஜேஇஇ தேர்வுகளுக்கு மாணவர்கள் தயாராக முடியாத சூழ்நிலை இருக்கிறது. இந்த நிலையில் தேர்வுகளை நடத்துவது சரியானது அல்ல. ஆகையால் இந்த தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்கவேண்டும். நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்துவதற்கு எதிராக அனைத்து மாநில முதல்வர்களும் உச்சநீதிமன்றத்தில் முறையிட வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களும் உச்சநீதிமன்றத்தில் நீட்,ஜேஇஇ தேர்வுகளுக்கு எதிராக மனுத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.