மொரிஷியஸ் கடலில் ஏற்பட்ட 1000 டன் எண்ணெய் கசிவால் இறந்த 18 திமிங்கலங்கள்!!

மொரிஷியஸ் நாட்டில் உள்ள கேரியர் கிராண்ட் சேபல் கடற்கரையில் நேற்று பதினெட்டு திமிங்கலங்கள் கரை ஒதுங்கிய சில மணி நேரத்தில் இறந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் மொரிஷியஸ் நாட்டில் உள்ள கேரியர் கிராண்ட் சேபலில் இருந்து 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) தொலைவில் கப்பல் ஒன்று பவளப்பாறை மீது மோதி 1,000 டன் எண்ணெய் நீரில் கொட்டியது. கப்பல் முழுவதுமாக உடைந்து திங்கள்கிழமை கடலில் மூழ்கியது. அதனை தொடர்ந்து நேற்று கிராண்ட் சேபலின் தென்கிழக்கு கடற்கரைகளில் காணப்பட்ட இந்த திமிங்கலங்கள் சில மணி நேரங்களில் அனைத்தும் இறந்துள்ளது.

இது பற்றி மொரிஷியஸ் நாட்டின் மீன்வளத்துறை அமைச்சர் சுதீர் மவுதோ கூறுகையில், “டால்பின் குடும்பத்தைச் சேர்ந்த 18 திமிங்கலங்கள் இறந்துவிட்டன. ஆனால் அவற்றின் உடல் மீதோ அல்லது அவற்றின் சுவாச அமைப்பிலோ ஹைட்ரோகார்பன்களின் தடயங்கள் எதுவும் இல்லை என்றும், இந்த மாத தொடக்கத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவுக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை” என்றும் கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து விலங்குகளின் பிரேத பரிசோதனை நேற்று மாலை மேற்கொள்ளப்பட்டது. மொரீஷியஸ் மரைன் கன்சர்வேஷன் சொசைட்டியின் அதிகாரி ஓவன் கிரிஃபித்ஸ், “18 திமிங்கலங்கள் இறந்துள்ளது மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு. மரணத்திற்கான காரணம் குறித்து எங்களுக்கு எதுவும் தெரியாது. நுரையீரல் பரிசோதனை, எண்ணெய் தடயங்கள் இருக்கிறதா என்று ஆய்வு செய்ய வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.
ஜப்பான் மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் வல்லுநர்கள் தீவின் சுற்றுச்சூழல் சேதத்தின் உண்மையான அளவை ஆராய்ந்து வருகின்றனர், அதன் பொருளாதாரம் சுற்றுலாவை பெரிதும் சார்ந்துள்ளது. ஆனால் இந்த விபத்தின் மூலம் பவளப்பாறைகளுக்கு பெரிய சேதம் ஏதும் இல்லை என்று ஆரம்பக்கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.