வருகிற செப்.1-ம் தேதி முதல் நியாயவிலைக்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

நியாயவிலைக்கடை பணியாளர்கள் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற செப்.1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர் என தமிழ்நாடு அரசு நியாயவிலைக்கடை பணியாளர் சங்க மாநில பொதுச்செயலாளர் கோ.ஜெயச்சந்திரராஜா தெரிவித்துள்ளார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறுகையில், “கொரோனா தொற்று மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் நியாயவிலைக்கடை பணியாளர்களையும் சேர்க்க வேண்டும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து அத்தியாவசிய பொருள்கள் நூறு சதவீதம் வழங்க வேண்டும்.
கொரோனா தொற்றால் மரணமடைந்த திருத்தணி வட்டம் அன்பழகன், மதுரை கார்த்திகேயன், திண்டுக்கல் ராமராஜ், சின்னமனூர் சேகரன் ஆகியோர் குடும்பங்களுக்கு தலா ரூ 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் எங்களுக்கு இரட்டிப்பு சம்பளம், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான ஊக்கத் தொகை ரூ.2500 இதுவரை வழங்கப்படவில்லை. இடை நில்லா பயண செலவு வழங்க பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியும் பல கூட்டுறவு சங்கங்கள் வழங்காததை கண்டிக்கிறோம்.
மேலும் மே, ஜூன், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்திற்கான ஊக்கத் தொகையும், இடைநில்லா பயண செலவிற்கான தொகையும், மாநிலம் முழுவதும் உடனே வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்தோம். நான்கு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றாத காரணத்தால் வருகிற செப்.1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.” என கூறினார்.