“எனக்கு உதவி செய்யுங்க.. இல்லனா நா செத்துடுவேன்” இங்கிலாந்து பிரதமரை பதறவைத்த டெல்லி பெண்!
![](https://thambattam.com/storage/2020/08/asfdsfa-780x470.jpg)
இந்திய தலைநகர் டெல்லியில் வசித்து வரும் 43 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் (புதன்கிழமை) இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு அவசர உதவி வேண்டி இ-மெயில் அனுப்பியுள்ளார். அதில் “அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள் எனக்கு உதவி கிடைக்கவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வேன்” என அந்த மெயிலில் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலை பிரதமரின் உதவியாளர்கள் பார்த்தவுடன் லண்டனில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தெரிவித்துள்ளனர். உடனடியாக தூதரக அதிகாரிகள் வெளியுறவு துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்துள்ளனர். அதன்படி அந்த பெண் இ – மெயிலில் குறிப்பிட்டிருந்த டெல்லியின் ரோஹிணி பகுதி காவல் நிலைய அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பெண் அவரது முகவரியை சரிவர தெரிவிக்காததால் நள்ளிரவு நேரம் என்றும் பாராமல் வீடு வீடாக சோதனையிட்டு சுமார் இரண்டு மணி நேர தேடுதலுக்கு பிறகு அந்த பெண்ணின் வீட்டை அடைந்துள்ளனர்.
அந்த வீட்டின் உரிமையாளர் கதவைத் திறக்க மறுத்துள்ளார். ஆனால் உள்ளேயிருந்து ஒரு பெண் ‘தயவு செய்து போய் விடுங்கள்’ என்று கத்தினார். பிறகு டெல்லி தீயணைப்பு வீரர்களை அழைத்து கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போனார்கள் போலீசார். அப்போது ஒரு பெண் ஹாலில் நின்று கொண்டிருந்தார். வீடு பூனைகளின் கழிவுகளினால் நாற்றம் அடித்துள்ளது. வீட்டுக்குள் சுமார் 16 பூனைகள் இருந்துள்ளன. போலீசாரை பார்த்தவுடன் அந்தப் பெண் அதிர்ச்சியடைந்து மன்னிப்புக் கேட்டுள்ளார்.
அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதை புரிந்து கொண்ட போலீஸார், பெண் கான்ஸ்டபிளை அழைத்து அவரிடம் பேச வைத்த போது அந்தப்பெண் அழத்தொடங்கி விட்டார். விவாகரத்து பெற்று 10 ஆண்டுகளாக அவர் தனிமையில் வாழ்ந்து வருகிறார், பூனைகள் தான் அவரது உலகமாக இருந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். டெல்லி முனிசிபாலிட்டி பள்ளியில் ஆசிரியையாக இருந்து 2-3 ஆண்டுகளுக்கு முன்பு வேலையை விட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
போலீஸாரும் அவருக்கு உதவ மனநல மருத்துவர்களை அழைத்தனர், அந்தப் பெண்ணின் வீட்டை சுத்தம் செய்த உதவி அவரை குளிக்க வைத்து சாப்பிட வைத்துள்ளனர். போலீஸாரிடம் அவர், தான் பிரிட்டன் பிரதமருக்கு மெயில் அனுப்பக் காரணம் ‘தன் கடன்களை அடைக்கவும், வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளைச் சமாளிக்கவும்’ உதவி கேட்டதாகத் தெரிவித்தார். இவ்வாறு போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.