கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் காலமானார்!

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் (70) .கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கன்னியாகுமரி தொகுதி எம்.பி-யும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆகஸ்ட் 10ம் தேதி முதல் சென்னை க்ரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் வசந்தகுமார் சிகிச்சை பெற்றுவந்தார்.
வெண்டிலேட்டரில் உயிர் காக்கும் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த வசந்தகுமாரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்று தகவல் வெளியான நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று இரவு 7 மணியளவில் மருத்துவமனையில் உயிரிழந்தார். கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யான வசந்தகுமாரின் உடல் அவருடைய சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்தில் இறுதிச் சடங்கு நடைபெற உள்ளது.
பாரம்பரியமாக காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்த வசந்தகுமார் 2 முறை எம்.எல்.ஏ-வாகவும் 1 முறை எம்.பியாகவும் பதவி வகித்துள்ளார். வசந்த அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர். வசந்தகுமாருக்கு விஜய் வசந்த், வினோத்குமார் என 2 மகன்களும் தங்கமலர் 1 மகளும் உள்ளனர்.
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமார் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி வசந்தகுமாருக்கு நாளை காலை 8 மணிக்கு தலைவர்கள், பொதுமக்கள் சென்னை சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.