காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் மறைவிற்கு பல்வேறு அரசியல் தலைவர்களின் ஆழ்ந்த இரங்கல்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த 10 ஆம் தேதியில் இருந்து சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி மாவட்டம் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமாரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்திருந்த நிலையில், எம்.பி. வசந்தகுமார் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பல அரசியல் தலைவர்களும் தங்களது ஆழ்ந்த  இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், “கன்னியாகுமரி எம்.பி.வசந்தகுமார் மறைந்த செய்தியை அறிந்து மிகவும் வருந்தினேன். தொழில்முனைவோரும், சமூக ஆர்வலருமான அவர், உலக அளவில் அரசியலிலும், வணிகத்திலும் பெயர் பெற்றுவிட்டார். தமிழக மக்கள் மீது அவர் கொண்ட அன்பு போற்றுதலுக்குரியது. அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆதரவாளர்களுக்கு என இரங்கல்” என தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டுவிட்டர் பதிவில், “கோவிட் -19 காரணமாக கன்னியாகுமரி எம்.பி. ஸ்ரீ எச்.வசந்தகுமாரின் மரணம் பற்றிய செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
மக்களுக்கு சேவை செய்வதற்கான காங்கிரஸ் சித்தாந்தத்திற்கான அவரது அர்ப்பணிப்பு நம் இதயங்களில் என்றும் நிலைத்திருக்கும். அவரது நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்” என பதிவிட்டுள்ளார்.

முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். விற்பனையாளராக தனது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தவர், தனது கடின உழைப்பின் மூலம் வாழ்வில் உயர்ந்தார். ஏழை, எளிய மக்களின் கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அரும்பணிகள் ஆற்றியவர். இவர் பல ஆண்டுகளாக பொதுவாழ்வில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு, மக்களின் அன்பைப் பெற்றவர். வசந்தகுமார் மறைவு காங்கிரஸ் கட்சியினருக்கும், தொகுதி மக்களுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை நான் வேண்டுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவருமான எச். வசந்தகுமார் அவர்கள் மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு பெரும் வேதனை அடைந்தேன். விரைவில் வீடு திரும்புவார் என்று நம்பிக்கையுடன் நினைத்திருந்த வேளையில் கொரோனா என்ற கொடிய நோய் அவரை நம்மிடமிருந்து பிரித்து விட்டது என்பது அதிர்ச்சியளிக்கிறது. கடின உழைப்பு, சலியாத முயற்சி ஆகியவற்றின் மூலம் முன்னேற்றத்தின் அனைத்துப் பரிமாணங்களையும் வாழ்வில் சாதித்துக் காட்டியவர். தொகுதி மக்கள் தன்னை எளிதில் சந்தித்து தங்களது குறைகளைத் தெரிவிக்கும் வாய்ப்பினைத் தவறாமல் ஏற்படுத்திக் கொடுத்தவர். இளைஞர்கள் வாழ்க்கையில் எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதற்கு – ‘வசந்த் அண்ட் கோ’ என்ற நிறுவனத்தைத் தனது கடின உழைப்பால் உருவாக்கிக் காட்டி முன்னுதாரணமாக விளங்கியவர். அரசியல் வேறு – மக்கள் பணி வேறு – வர்த்தகம் வேறு என்பதை மிகத் தெளிவாக வரையறுத்துக் கொண்டு, பொதுவாழ்விற்கு ஒரு இலக்கணமாகவும் எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த அவரின் மறைவு, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ள ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்” என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர்  எச்.வசந்தகுமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. தொடக்கத்தில் வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணி புரிந்து, பின்பு மளிகை கடையைத் தொடங்கி, படிப்படியாக முன்னேறி வசந்த் அண்டு கோ என்னும் பெரிய வணிக நிறுவனத்தின் உரிமையாளராகத் திகழ்ந்தவர். உழைப்பால் உயர்ந்த வசந்தகுமார் அவர்கள், உறுதியான காங்கிரஸ் தலைவர். தன்னால் முடிந்த அளவுக்கு மக்களுக்கு உதவியவர். இவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கு இழப்பாகும். வசந்தகுமார் அவர்களை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கும், காங்கிரஸ் கட்சி தோழர்களுக்கும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது டிவிட்டர் பதிவில், “கடின உழைப்பால் முன்னேறிய தொழில் முனைவோரும், தொலைக்காட்சி நிறுவனரும், கன்னியாகுமரி மக்களவை உறுப்பினருமான வசந்தகுமார் அவர்கள் உடல்நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன். அவரை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இரங்கல் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், “நடுத்தரக் குடும்பங்களின் வலியறிந்து, வியாபாரத்தை வளர்த்தவர். தன்னுடைய வளர்ச்சியோடு தன்னை சுற்றியிருந்தோரையும் முன்னேற்றியவர். அரசியலிலும் கறை படியாது வாழ்ந்து, மறைந்த திரு. வசந்தகுமார் அவர்களின் மறைவு தமிழகத்திற்கே இழப்பு” என குறிப்பிட்டுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவருமான திரு.H.வசந்த குமார் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு அதிர்ச்சியும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். வணிகத்தில் தனக்கென ஒரு முத்திரை பதித்தவரும், உழைப்பு ஒன்றே வளர்ச்சிக்கு முதலீடு என்பதை நிரூபித்தவரும், எவ்வித அரசியல் சூழல் ஏற்பட்டாலும் தனது புன்னகையால் அனைவரையும் வசீகரித்த திரு. வசந்தகுமாரின் இழப்பு காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். திரு.வசந்த குமார் அவர்களின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x