“என் மரத்த காணோம்…” புகாரளித்த சிறுவன்… பாய்ந்து வந்து ‘தந்த’ காவல்துறை!

மரத்தை காணவில்லை என காவல் நிலையத்தில் சென்று புகாரளித்த சிறுவனுக்கு மரகன்றுகளை பரிசாக அளித்துள்ளனர் கேரள மாநில காவல்துறையினர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியை சேர்ந்த 6ம் வகுப்பு மாணவன் பவன். இந்த மாணவன் கடந்த இரண்டு வருடங்களாக அவரது வீட்டிற்கு அருகில் நெல்லிக்காய் மரம் ஒன்றை வளர்த்து வந்துள்ளார். ஆனால், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த நெல்லிக்காய் மரம் காணாமல் போயுள்ளது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவன், சிரி என்ற குழந்தைகளுக்கான டெலிபோன் ஆலோசனை மையத்திற்கு அழைத்து சம்பவம் குறித்து கூறி அழுதிருக்கிறார். மாநில அரசால் நடத்தப்படும் சிரி என்ற அமைப்புக்கு சிறுவன் அழைத்ததைத் தொடர்ந்து, இதுகுறித்து அப்பகுதி காவல் அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது.
அதனை அடுத்து, அப்பகுதி காவலர்கள், மரத்தை இழந்த சிறுவனுக்கு புதிய 9 மரக்கன்றுகளை பரிசாக அளித்துள்ளனர். மேலும், அந்த சிறுவனை சமாதானமும் செய்துள்ளனர். இதுமட்டுமல்லாமல், இந்த சம்பவம் குறித்து அறிந்த கொச்சியை சேர்ந்த தனியார் நிறுவனம், சிறுவனது வீட்டு வாசலில் சிசிடிவி கேமராவையும் பொருத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த சிறுவன் பேசியபோது, “என் பள்ளியில் இருந்து வாங்கிவந்த மரக்கன்று என்பதால் அதனை நான் நன்றாக வளர்த்துவந்தேன். 2 அடி உயரம் வளர்ந்திருந்தது. திடீரென்று யாரோ அதனை வெட்டிச்சென்றுவிட்டனர். சிறு கிளையை மட்டும் கீழே போட்டுவிட்டு சென்றுள்ளனர். இதுகுறித்து புகார் அளித்தபின்னர் எனக்கு 9 மரக்கன்றுகள் கிடைத்துள்ளது” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.