ஜப்பான் கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவை தொடர்ந்து உயிரிழந்த 40 டால்பின்கள்!!!

மொரீசியஸ் நாட்டின் கடல் பகுதியில் விபத்துக்குள்ளான ஜப்பான் கப்பலில் ஏற்பட்ட எண்ணெய் கசிவை தொடர்ந்து அங்கு உயிரிழந்த டால்பின்களின் எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான எம்.வி.வகாஷியோ எனும் கப்பல் 4000 டன் எண்ணெயை ஏற்றிக்கொண்டு பிரேசில் நோக்கி சென்று கொண்டிருந்தது. கடந்த மாதம் 25ஆம் தேதி மொரீசியஸ் வழியாக பயணித்தபோது, பவளப் பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் இருந்த சுமார் 4000 டன் எண்ணெயில் 1000 டன் எண்ணெய் கடலில் கசிந்தது. இதனால் அப்பகுதி கடல் நீர் முழுவதும் எண்ணெய் படலமாக காட்சியளித்தது.
எண்ணெய் கசிவு காரணமாக அப்பகுதியில் உள்ள கடல்வாழ் உயிரினங்களுக்கும் அனைத்தும் ஆபத்தில் சிக்கின. இதனிடையே இந்த விபத்தை மொரிசியஸ் பிரதமர் பிரவிந்த் ஜுக்நாத் நாடு தழுவிய சுற்றுச்சூழல் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். இந்த விபத்தை தொடர்ந்து கப்பல் கேப்டன் மற்றும் மாலுமிகளை கைது செய்து மொரீசியஸ் அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் கடலில் உள்ள கப்பலை அகற்றியுள்ள அந்நாட்டு அரசு கடலில் உள்ள எண்ணெய் மாசுவை அகற்றும் பணியிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

இதனிடையே எண்ணெய் கசிவு ஏற்பட்ட கடல் பகுதியில் இருந்து சுமார் 25 டால்பின்கள் உயிரிழந்த நிலையில் நேற்று முந்தினம் கரை ஒதுங்கியது. உடல் சிதைந்த நிலையிலும் தாடைகளைச் சுற்றி பல காயங்களும் ரத்தமும் இருந்த நிலையில் காணப்பட்ட இந்த டால்ஃபின்களை அதிகாரிகள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

இந்நிலையில் இன்று மேலும் 15 டால்பின்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்த டால்பின்களின் எண்ணிக்கை 40 ஆக அதிகரித்துள்ளது. ஆனால் டால்பின்கள் உயிரிழப்புக்கான காரணங்கள் மர்மமாகவே இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏனெனில் முந்தைய நாள் மீட்கப்பட்ட 2 டால்பிகள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. அதில் டால்பின்களின் உடலில் காயத்தின் அறிகுறிகள் இருந்தன. ஆனால் அவற்றின் உடலில் ஹைட்ரோகார்பன்களின் தடயங்கள் இல்லை. அதாவது எண்ணெய் கசிவினால் பாதிக்கப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.இருப்பினும் டால்பின்கள் அனைத்தும் கப்பல் விபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து மீட்கப்படுவது அதிகாரிகளை குழப்பமடைய செய்துள்ளது.