ரூ.4.5 கோடியை சேமிக்க ரூ.6 கோடி செலவா? தி.மு.க.,- எம்.பி., கேள்வி!

‘எம்.பி.,க்களே மனமுவந்து தரும் நிலையில், சம்பள குறைப்பு மசோதாவை கொண்டு வந்து, விவாதம் நடத்தி, சபையின் நேரத்தையும், பணத்தையும் வீணடிக்கலாமா’ என, தி.மு.க., – எம்.பி., ராஜ்யசபாவில் கடுமையாக சாடினார்.
எம்.பி.,க்களின் சம்பளத்தை, 30 சதவீதம் ஓராண்டுக்கு குறைப்பது மற்றும் தொகுதி மேம்பாட்டு நிதியை இரண்டு ஆண்டுகளுக்கு ரத்து செய்வது போன்ற அம்சங்களை உள்ளடக்கிய, மசோதாவின் மீதான விவாதம், ராஜ்யசபாவில் நடைபெற்றது.
அதில் பங்கேற்று, தி.மு.க., – எம்.பி., வில்சன் பேசியதாவது:
பார்லிமெடின் இரு சபைகளையும் நடத்த, ஒரு நிமிடத்திற்கே, லட்சக்கணக்கான ரூபாய், செலவாகிறது. இத்தகைய மதிப்புமிக்க சபையின் நேரத்தை, இந்த அரசு எப்படி வீணடிக்கிறது என்பதற்கு, இந்த மசோதா ஒரு உதாரணம். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, எம்.பி.,க்களே மனமுவந்து தர தயாராக இருக்கும் நிலையில், சம்பளக்குறைப்புக்காக ஒரு மசோதா தேவைதானா, அதற்காக விவாதம் நடத்த வேண்டுமா…சம்பளக்குறைப்பு மூலம், அரசுக்கு கிடைக்கப்போவது, 4 கோடியே, 55 லட்சம் ரூபாய். ஆனால், இந்த மசோதாவை நிறைவேற்ற ஆகும் செலவு, 6 கோடி ரூபாய்.
தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்திருப்பதும், அரசின் தன்னிச்சையான நடவடிக்கையே. இந்த நடவடிக்கையின் மூலம், தொகுதி மக்களின் உரிமையை, அரசு பறித்துள்ளது. தமிழகத்தில் மொத்தம், 57 எம்.பி.,க்கள் உள்ளனர். இந்த மசோதாவை நிறைவேற்றியதன் மூலம், எங்கள் மாநிலம், 770 கோடி ரூபாயை இழந்துஉள்ளது. இந்த நிதி பறிக்கப்பட்டுள்ளதால், கூட்டாட்சி முறை தகர்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர், பேசினார்.
மற்றொரு விவாதத்தில், தி.மு.க., – எம்.பி., சிவா பேசியதாவது:
தமிழகத்தில் 84 லட்சம் பேர், வேலைவாய்ப்பு அலுவலத்தில் பதிவு செய்து வைத்துள்ளனர். 7.6 சதவீதமாக இருந்த, மாநிலத்தின் வேலையின்மை பிரச்னை, இந்த கொரோனா காலத்தில், 13.5 சதவீதமாகிவிட்டது. மிகப்பெரிய பட்டப்படிப்பு படித்தவர்கள்கூட சாதாரண பணிகளுக்கு விண்ணப்பிக்கின்றனர். எனவே, தமிழகத்தில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களுக்கான, 90 சதவீத வேலைவாய்ப்புகளில், தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கே பணி வழங்கிட, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.