தமிழகத்தில் இ – பாஸ் ரத்து; செப். 1 முதல் பேருந்துகள் இயங்க அனுமதி

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்திற்குள் செல்ல இ-பாஸ் தேவையில்லை. செப். 1ம் தேதி முதல் பேருந்து சேவை தொடங்க உள்ளது.
நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து, நேற்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், தமிழக அரசும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை, செப்டம்பர் 30ம் தேதி வரை நீட்டித்து உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்திற்குள் செல்ல இ பாஸ் தேவையில்லை. மாநிலம் முழுவதும் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் செப்டம்பர் 1 முதல் பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. தலைநகர் சென்னையில் செப்டம்பர் 1 முதல் தனியார் மற்றும் அரசு பேருந்து சேவைகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

செப்டம்பர் 7 முதல் சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும், வணிக வளாகங்கள், பெரிய கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அனைத்து வங்கிகளும் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கடைகள் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்க அனுமதி. திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி; ஆனால் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் செப்டம்பர் 30 வரை இயங்க தடை. தமிழகத்தில் திரையரங்குகள், நீச்சல் குளங்கள், பொதுமக்கள் கூடும் பொழுதுபோக்கு இடங்கள் செப்டம்பர் 30 வரை இயங்க தடை விதிக்கப்படுகிறது.

தமிழகத்தில் சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை மற்றும் புறநகர் ரயில் சேவைக்கு தடை. மதம் சார்ந்த கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகள், கல்வி நிகழ்வுகள் உள்ளிட்டவற்றுக்கு செப்டம்பர் 30 வரை தடை. தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் செப்டம்பர் 1 முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும். உடற்பயிற்சி கூடங்கள், பூங்காக்கள் திறக்க அனுமதி.
கொடைக்கானல், ஊட்டி போன்ற சுற்றுலா தலங்களுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட ஆட்சியரிடம் இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும்.
அதேசமயம் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு செப்டம்பர் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனினும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு பொருந்தாது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.