தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல்கானை விடுவித்த அலகாபாத் உயர் நீதிமன்றம்!

தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கைது செய்யப்பட்ட டாக்டர் கபீல் கான் மீதான வழக்குகளை அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று(செப்டம்பர்1) தள்ளுபடி செய்து அவரை உடனடியாக விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பல்கலைக்கழகத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கான எதிராகக் கடந்தாண்டு டிசம்பர் 10 ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட டாக்டர் கஃபீல்கான், தேச ஒற்றுமைக்கும், பாதுகாப்புக்கும் எதிராகப் பேசியதாக அம்மாநில காவல்துறையினரால் கடந்த ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த மாவட்டக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கஃபீல்கானை மதுரா சிறைச்சாலையில் அடைக்க உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் உத்திரபிரதேச அரசாங்கம் கானின் காவலை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டித்தது.

கபீல் கானின் தாயார் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கோவிந்த் மாத்தூர் மற்றும் நீதிபதி சாமித்ரா தயால் சிங், கஃபீல் கான் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டனர். மேலும், கஃபீல் கான் அலிகார் பல்கலைகழகத்தில் பேசியவை தேச பாதுகாப்புக்கு எதிரானதாகவோ அல்லது ஒரு சமூகத்துக்கு எதிராக வெறுப்பைத் தூண்டக்கூடிய வகையிலோ இல்லை என்று நீதிபதிகள் கருத்துத் தெரிவித்தனர்.
அதேபோல், அவரைத் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டது சட்ட விரோதமானது என்றுகூறி உடனடியாக அவரை விடுதலை செய்யவும் உத்திரபிரதேச காவல்துறைக்கு அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.