இந்திய தேர்தல் ஆணையராக இன்று பொறுப்பேற்றார் ராஜீவ் குமார்!

ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் நிதித்துறை செயலருமான ராஜீவ் குமார் இந்திய தேர்தல் ஆணையராக இன்று பொறுப்பேற்றுள்ளார்.
தேர்தல் ஆணையராக இருந்து வந்த அசோக் லவசா, ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத்தலைவர் பொறுப்பை ஏற்றதை தொடர்ந்து தேர்தல் ஆணையர் பதவியை ராஜினாமா செய்தார். அதனையடுத்து, அவருக்கு பதிலாக ஓய்வு பெற்ற முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், முன்னாள் நிதித்துறை செயலருமான ராஜீவ் குமார் புதிய தேர்தல் ஆணையராக கடந்த சில தினங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜீவ் குமார் இந்த ஆண்டு பிப்ரவரியில் நிதித்துறை செயலராக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வுக்கு பிறகு பொது நிறுவனங்கள் தேர்வு வாரிய தலைவராக அரசால் அவர் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்த நிலையில் அவர் தற்போது இந்திய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார்.
நிதித்துறை செயலராக ராஜீவ் இருந்த போது பரோடா, விஜயா, தேனா வங்கிகளை ஒன்றாக இணைப்பதில் பெரும் பங்காற்றியவர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா ஆகியோருடன் இணைந்து ராஜீவ் குமார் செயல்படவிருக்கிறார்.