சீனாவின் ஆதிக்கத்தை முறியடிக்க இணையும் மூன்று நாடுகள்!!
சீனாவின் வர்த்தக ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில், இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் ஒன்றிணைந்து செயல்பட இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் முடிவு செய்துள்ளன.
லடாக்கில் சீனா தொடர்ந்து அத்துமீறி வரும் நிலையில், பிராந்தியத்தில் வர்த்தகம் மற்றும் புவிசார் அரசியல் பதட்டங்கள் அதிகரித்துள்ளன.
இந்நிலையில் இன்று, ஜப்பான், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவின் வர்த்தக அமைச்சர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினர். அப்போது இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் விநியோகச் சங்கிலியை பலப்படுத்த இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டனர். மேலும், ‘நடப்பாண்டின் பிற்பகுதியில் விநியோக சங்கிலிகளை வலுப்படுத்தும் ஒரு முன்முயற்சிக்கான விவரங்களை உடனடியாக துவங்க அமைச்சர்கள் தங்கள் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர்’ என்று கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த முயற்சியில் இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் ஒத்த கருத்துள்ள பிற நாடுகளையும் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். மூத்த அமெரிக்க தூதர் ஒருவர், “அமெரிக்கா இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் ஒரு பரந்துப்பட்ட பாதுகாப்பு கூட்டணிக்கான தளமாக இயங்க விரும்புகிறது” என நேற்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.