கொரோனாவிடம் இருந்து தப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!
![](https://thambattam.com/storage/2020/09/921682-916678-619584-csk-102517-780x470.jpg)
சமீபத்திய பரிசோதனையில் எந்தவொரு சிஎஸ்கே வீரருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபாய், அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
கடந்த வாரம், இரண்டு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில் தற்போது எடுக்கப்பட்ட அடுத்தக்கட்டப் பரிசோதனையில் எந்தவொரு சிஎஸ்கே வீரருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. துபாய்க்கு ஆகஸ்ட் 21 அன்று வந்த சிஎஸ்கே அணியில், 13 பேருக்கு கொரோனா உறுதியானதால் தங்களுடைய தனிமைப்படுத்துதல் காலத்தை நீட்டிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
![](https://thambattam.com/storage/2020/09/2018_4largeimg15_Sunday_2018_013906303-300x145.jpg)
திங்கள் அன்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனைகள் சிஎஸ்கே அணிக்குச் சாதகமாகவே வந்துள்ளது. தற்போது, அடுத்தக்கட்டப் பரிசோதனையிலும் யாருக்கும் கொரோனா இல்லை என்பது உறுதியானால் செப்டம்பர் 4 முதல் சிஎஸ்கே வீரர்கள் பயிற்சியை ஆரம்பிப்பார்கள் என்று கூறப்படுகிறது. மற்ற அணிகள் போல கொரோனாவால் சிஎஸ்கே அணியும் பாதிக்கப்படாமல் இருந்திருந்தால் கடந்த ஆகஸ்ட் 28 அன்றே பயிற்சியை ஆரம்பித்திருக்கும்.
செப்டம்பர் 3 அன்று அடுத்தப் பரிசோதனை மேற்கொண்ட பிறகு செப்டம்பர் 4 முதல் பயிற்சியைத் தொடங்குவோம் என சிஎஸ்கேவின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். மேலும் செப்டம்பர் 19 அன்று ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் விளையாடவும் சிஎஸ்கே அணி தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.