“அதிகமாக பரவி வரும் கொரோனாவால் என்னால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாது” – மேற்கு வங்க எம்.பி

நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்று அச்சத்தால் என்னால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாது என்பதால் விடுமுறை தர வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சுகேந்து சேகர் ராய் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும். கொரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும்.
கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை. கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் அறிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா தொற்றால் என்னால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியாது என்பதால் விடுமுறை தர வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை எம்.பி. சுகேந்து சேகர் ராய் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மாநிலங்களவைத் தலைவரும், குடியரசுத் துணைத் தலைவருமான வெங்கய்ய நாயுடுவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் ”எனக்கு வயதாகி விட்டதால் கொரோனா பரவல் சூழலில் வெளியே வர முடியாத நிலை உள்ளது. எனவே செப்டம்பர் 14-ம் தேதி முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் நாடாளுமன்ற மழைகாலக் கூட்டத்தொடரில் என்னால் பங்கேற்க இயலாது. எனவே எனக்கு விடுமுறை அளிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.