ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்ஸ் நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டது நிரூபணம்! ஜெர்மனி அரசு தகவல்!
நரம்பு மண்டலத்தை தாக்கும் கொடிய விஷம் அலெக்ஸ் நவ்லனிக்கு கொடுக்கப்பட்டது என அவருக்கு சிகிச்சை அளித்த ஜெர்மன் அரசு தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புடின்னை எதிர்த்து எதிர்கட்சி தலைவராக இருப்பவர் அலெக்ஸ் நவல்னி. சமீபகாலமாக கடுமையாக அதிபர் விளாடிமிர் புடின் ஆட்சியை விமர்சித்து வருகிறார்.
அலெக்ஸ் நவல்னி கடந்த ஆகஸ்ட் 20 தேதி ஒம்சக் நகரிலிருந்து விமானம் மூலம் மாஸ்கோ சென்றார். அப்போது அவருக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. விமானம் ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னியின் உடல்நிலை மோசமடைந்தது. இதனால் மேல் சிகிச்சைக்காக சிறப்பு விமானம் மூலம் ஜெர்மனி நாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் நரம்பு மண்டலத்திற்கும் தசைகளுக்கும் இடையேயான தொடர்பை துண்டிக்கக்கூடிய ‘நோவிசோக்’ எனப்படும் கொடிய விஷம் உடலில் கலந்திருப்பதை தெரிவித்தனர். அலெக்ஸ் நவல்னி பற்றி மருத்துவமனை அறிக்கையை ஜெர்மன் அரசும் வெளியிட்டது. இது குறித்து ஜெர்மன் சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியது, நவல்னிக்கு கொடிய விஷம் கொடுத்துள்ளது அம்பலமாகிவிட்டது. இதற்கு ரஷ்ய அரசு நிச்சயம் பதில் சொல்லி ஆக வேண்டும் என்றார்.
இந்த நிலையில், ஜெர்மனி அரசின் தகவல் தொடர்பாக தங்களுக்கு எவ்வித தொடர்பும் வரவில்லை என்று ரஷ்ய அரசு கூறுவதாக அங்கிருந்து வெளிவரும் டாஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. தற்போது இந்த பிரச்சனையால் ஜெர்மனி மற்றும் ரஷியா இடையே நெருக்கடி ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.