“ஜனநாயகத்தை கொலை செய்கிறார்கள்!” கேள்விநேரம் ரத்து செய்ததற்கு தலைவர்கள் கண்டனம்!

பொருளாதாரம் குறித்தும், கொரோனா வைரஸ் பரவல் குறித்தும் எதிர்க்கட்சிகளால் கேள்வி கேட்க முடியாதபடி நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்திருப்பதற்கு நாட்டின் முக்கிய தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14-ம் தேதி தொடங்கி வார விடுமுறையின்றி, அக்டோபர் 1-ம் தேதிவரை நடக்கிறது. சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இரு அவைகளும் இயங்கும். கொரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையிலும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடக்கும். கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை. தனிநபர் மசோதாவும் இல்லை. கேள்வி நேரத்துக்குப் பிந்தைய நேரமும் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்படும் என்று மக்களவை, மாநிலங்களவைச் செயலாளர்கள் இன்று அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் ஓ பிரையன் ட்விட்ரில் பதிவிட்ட கருத்தில் ‘மழைக்காலக் கூட்டத்தொடர் வரும் 14ம்தேதி தொடங்கும் நிலையில் எம்.பி.க்கள் அனைவரும் கேள்வி நேரத்தில் கேட்க வேண்டிய கேள்விகள் குறித்து 15 நாட்களுக்கு முன்பே தாக்கல் செய்வது அவசியம் எனக் கூறப்பட்டது. ஆனால் இப்போது கேள்வி நேரத்தை ரத்து செய்து ஆளும் அரசை எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்கும் உரிமையை தடுத்திருக்கிறார்கள். கொரோனாவைக் காரணம் காட்டி ஜனநாயகத்தை கொலை செய்கிறீர்கள். கேள்வி நேரம் என்பது முக்கியமானது ஏனென்றால், நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்கள் எழுப்பும் கேள்விக்கு சம்பந்தப்பட்டதுறை அமைச்சர்கள் விளக்கம் அளிப்பார்கள். ஆனால், கேள்விநேரத்துக்கு பிந்தைய நேரத்தில் அது இல்லை. இதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், கொரோனா வைரஸ் பரவல் குறித்தும் மத்திய அரசிடம் கேள்வி ஏதும் கேட்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “சில வலிமையான தலைவர்கள், கொரோனாவைக் காரணமாகக் கூறி, ஜனநாயகத்தையும், எதிர்ப்பையும் கட்டுப்படுத்துவார்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பே நான் கூறினேன். தாமதமான நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குறித்த அறிவிக்கையின் நோக்கமே, கேள்வி நேரம் கூடாது என்பதுதான். எங்களை பாதுகாப்பாக வைக்கவே கேள்விநேரம் இல்லை எனும் வாதத்தை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தில் அரசைக் கேள்வி கேட்பது என்பது ஆக்ஸிஜன் போன்றது. ஆனால், இந்த அரசு நாடாளுமன்றக் கூட்டத்தை அறிவிக்கை மூலம் குறைத்து, தேவையான மசோதாக்களை நிறைவேற்றிக்கொள்ள தன்னிடம் இருக்கும் பெரும்பான்மையை ரப்பர் ஸ்டாம்ப் போல் பயன்படுத்துகிறது. பொறுப்புணர்வை ஊக்குவிப்பதற்கான கேள்வி நேரம் எனும் செயல்முறை இப்போது அகற்றப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைஸி கூறுகையில், ”நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அரசியலமைப்புச் சட்டத்திக்கு எதிரானது. இதுகுறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமையான அதிகாரப் பகிர்வு என்ற அடிப்படையை பாஜக அரசு உடைக்கிறது. இது ஜனநாயகத்திற்கு எதிரானது” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x