கொரோனாவை கட்டுபடுத்திய உலகின் 50 சிறந்த சிந்தனையாளர்களில் முதலிடம் பிடித்த ஷைலஜா டீச்சர்!!

கொரோனா தொற்றுப் பரவலை சிறப்பாகக் கட்டுப்படுத்திய 50 மனிதர்களில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் முதலிடம் பெற்றுள்ளதாக பிரிட்டிஷ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றானது உலகின் 190க்கும் மேற்பட்ட நாடுகளை பாதித்துள்ளது. இந்த புதிய வைரஸ் தொற்றால் உரிய சிகிச்சை முறை குறித்து பல்வேறு நாடுகளும் தடுமாறி வந்தன. எனினும் இந்தியாவில் முதன்முதலில் கொரோனா பாதிப்பு பதிவான கேரள மாநிலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. இதன்காரணமாக நாட்டின் பிற பகுதிகளைக் காட்டிலும் கேரளத்தில் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்தது. இதன்மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் முக்கிய கவனம் பெற்றார்.

சர்வதேச அளவில் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் கேரள மாநில அரசின் நடவடிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மாநில சுகாதாரத் துறையின் பணியை ஐக்கிய நாடுகள் அவையும் கடந்த ஜூன் மாதம் பாராட்டியது. தொடர்ந்து ஐக்கிய நாடுகளின் அவையின் பொது சேவைகள் தினத்தில் நடைபெற்ற இணையக் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் ஷைலஜா டீச்சர்.

இந்நிலையில் பிரபல பிரிட்டிஷ் பத்திரிகையான ‘ப்ராஸ்பெக்ட்’, கொரோனாவை திறம்பட கையாண்ட 50 பேர் கொண்ட பட்டியலில் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா டீச்சர் முதலிடம் பிடித்துள்ளார். ஷைலஜா டீச்சரை கொரோனா காலத்தில் சிறப்பாகச் செயல்பட்ட சிந்தனையாளர் என அந்தப் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயை நிர்வகிப்பதில் கேரளம் தொடர்ந்து ஒரு உத்வேகமாக உள்ளது எனத் தெரிவித்துள்ள அந்தப் பத்திரிகை ‘ஜனவரி மாதத்தில் கொரோனா தொற்று சீனாவில் பரவலான போது, அதன் தவிர்க்க முடியாத வருகையை துல்லியமாக கணித்தது மட்டுமல்லாமல் அதன் தாக்கங்களை முழுமையாகப் புரிந்து கொண்டு சிறப்பாக செயல்பட்டவர்’ என ஷைலஜா டீச்சரைப் பாராட்டியுள்ளது.
ஷைலஜா டீச்சரைத் தொடர்ந்து நியூசிலாந்து பிரதமர் ஜசிந்தா ஆர்டெர்ன் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். பிபிசி, தி நியூயார்க் டைம்ஸ், தி கார்டியன் மற்றும் பிற சர்வதேச ஊடக அமைப்புகளும் கடந்த காலங்களில் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் கேரளத்தின் முயற்சிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.