மருந்துக்காக இந்திய நிறுவனங்கள் தீவிரம்!
உலகம் முழுவதையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீள பல நாடுகளின் முன்னணி மருத்துவர்களும், ஆய்வாளர்களும் மருந்து கண்டுபிடிக்கும் பணிகளில் தீவிரமாக இருக்கிறார்கள். அதே வேகத்தோடு இந்தியாவின் 6 முக்கிய நிறுவனங்களின் விஞ்ஞானிகளும் வைரஸை கட்டுப்படுத்தும் மருந்தை கண்டுபிடிக்க களம் இறங்கியிருக்கிறார்கள்.
உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 70 க்கும் மேற்பட்ட மருந்துகள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று மட்டும் மனிதர்களுக்கு சோதனை செய்வது என்ற நிலைக்கு வந்துள்ளது. ஆனால், 2021ஆம் ஆண்டுக்கு முன்பு பெரிய அளவிலான மக்களுக்கு அளிக்கக் கூடிய வகையிலான மருந்துகள் இதுவரை கண்டறியப்படவில்லை.
கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 1.9 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரம் உயிர்களுக்கு மேல் பறிபோயுள்ளது.
இந்தியாவில் “சைடஸ் கேடிலா” (Zydus Cadila) நிறுவனம் தற்போது இரண்டு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. சீரம் இன்ஸ்டியூட், பயாலஜிக்கல் ஈ, பாரத் பயோடெக், இந்தியன் இம்யூனோலாஜிக்கல்ஸ் மைன்வாக்ஸ் ஆகிய நிறுவனங்கள் தலா ஒரு மாற்று மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கின்றன” என்று ஹெல்த் சயின்ஸ் மற்றும் டெக்னாலஜி கழகத்தின் இயக்குனர் ககன்தீப் கங் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ககன்தீப் கங், சிஇபிஐயின் (Coalition for Epidemic Preparedness Innovations) துணைச் சேர்மனாகவும் பதவி வகித்து வருகிறார். அந்த நிறுவனம், ‘கொரோனா பரவும் வேகம் மற்றும் காலஅளவால் அதற்கான மருந்துகள் கண்டுபிடிப்பது சிரமமாக உள்ளது” என தனது ஆய்வின் முடிவில் தெரிவித்திருந்தது. “பல ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட தொற்று நோய்களுக்கு மருந்து கண்டுபிடிக்க 10 ஆண்டுகள் ஆனது போல் கொரோனாவுக்கு ஆகாது என்றாலும் குறைந்தது ஒரு வருட காலமாவது மருந்து கண்டுபிடிப்பதற்கு தேவைப்படும்” எனவும் ஆய்வில் கூறப்பட்டிருந்தது.
கேரளாவில் அமைந்திருக்கும் ராஜீவ்காந்தி பயோடெக்னாலஜி மையத்தில் தலைமை அறிவியல் அதிகாரியாக பணிபுரியும் ஸ்ரீகுமார் இதுகுறித்து கூறும்போது, மருந்துகள் கண்டுபிடிப்பது காலம் எடுக்கும் வேலை என்பதோடு, அது பல சவால்கள் நிறைந்தது எனவும் பல்வேறு படிநிலைகளில் உள்ள சோதனைகளை தாண்டி மாற்று மருந்துகள் தயாரிக்கப்பட வேண்டும் என்றும், மேலும் அதற்கு ஒப்புதல் வாங்குவதற்கும் காலம் ஆகும் எனவும் கூறியுள்ளார்.
“கொரோனா வைரஸை பொறுத்தவரை இந்த வருடத்தில் அதற்கு மருந்து கண்டுபிடிப்பது சாத்தியமில்லை” என்பதை சிஎஸ்ஐஆர் மூலக்கூறு பயாலஜி பிரிவின் தலைவரான ராகேஷ் மிஸ்ராவும் உறுதிசெய்துள்ளார். மருந்துகள் சோதனை பொதுவாக விலங்குகளில் தொடங்கி பல கட்டங்களைத் தாண்டிய பிறகுதான் மனிதர்களுக்கு சோதனை செய்ய முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.
விலங்குகளை தாண்டி வந்தபோதும் மனிதர்களில் இந்த மாற்று மருந்துகளை பரிசோதிப்பதில் பல கட்டங்கள் இருப்பதாக ஸ்ரீகுமார் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். முதல் கட்டத்தில் மிகக் குறைந்த அளவு மனிதர்களுக்கு இந்த சோதனை நடத்தப்படும் எனவும், அதன் மூலம் இந்த மருந்து மனிதர்களுக்கு தகுதியானதா என்று கண்டுபிடிக்கப்படும், இரண்டாவது கட்டத்தில் நூற்றுக்கணக்கான மனிதர்களுக்கு இந்த மருந்தின் மூலம் சோதனை நடத்தப்பட்டு நோயை குணமாக்குவதில் எவ்வளவு துல்லியமாக இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்படும் எனவும் கூறினார். இறுதி கட்டமாக ஆயிரக்கணக்கான மக்கள் மீது பரிசோதிக்கப்பட்டு மருந்தின் திறன் மற்றும் அது குணப்படுத்தும் காலம் ஆகியவை கண்டுபிடிக்கப்படும். இது செய்வதற்கு மாதக்கணக்கில் ஆகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதை காரணமாக கொண்டே இந்த வருடத்தில் மாற்று மருந்து கண்டுபிடிக்கப்பட இயலாது என்று அவர் கூறியுள்ளார் இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டாலும் அதற்கு பிறகும் இதில் சவால்கள் நிறைந்துள்ளதாகவும் அனைத்து மக்களுக்கும் இந்த மாற்று மருந்து ஏற்றுக் கொள்ளப்படுமா என்பதும், கொரோனா வைரசின் புதிய இழைகளையும் அந்த மருந்து குணப்படுத்துமா என்பதும் கண்டறியப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
“பல மருந்துகளை ஆய்வில் இருந்தாலும் தற்போதுதான் அவை முதல் கட்டத்தில் இருக்கிறது எனவும் அடுத்தகட்டத்துக்கு எப்போது மாற்றப்படும் என்பது குறித்து நம்மால் சொல்ல முடியாது அவை நடப்பதற்கு சில மாதங்கள் ஆகலாம்” என்று ஸ்ரீகுமார் கூறி உள்ளார். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மூன்று மருந்துகள் மனிதர்களுக்கு பரிசோதிக்கும் நிலையை எட்டி உள்ளதாகவும் மற்ற அனைத்தும் சோதனைக் கூடங்களில் மற்றும் விலங்குகளில் மட்டுமே சோதனை செய்யும் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி சிஇபிஐ (CEPI) வெளியிட்ட அறிக்கையின்படி, 115 மாற்று மருந்துகள் அனுப்பப்பட்டு இருப்பதாகவும், அவற்றில் 73 சோதனைக் கூடங்களில் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளது. அவற்றில் மிகவும் தகுதியானவை அடுத்த கட்டமாக மருத்துவமனை பரிசோதனை அதாவது மனிதர்களுக்கு பரிசோதனை செய்யும் நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அவற்றில் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட மாடர்னா, சீனாவின் மருந்து கம்பெனியான கான்சினோ பயாலஜிக்கல், அமெரிக்காவின் மருந்து தயாரிக்கும் நிறுவனமான இன்னோவியோ நிறுவனம் ஆகியவை அடங்கும்.
சிஇபிஐ அறிவியல் ஆய்வாளர்களின் கருத்துப்படி இன்னும் சில மருந்து கண்டுபிடிக்கும் நிறுவனங்கள் 2020க்குள் மனிதர்களுக்கு சோதனை செய்யும் நிலையை எட்டும். சீன ஆய்வாளர்கள் அளித்துள்ள கொரோனா வைரஸின் ஜீனோம் அமைப்பு இதற்கு முன்பு ஏற்பட்ட தொற்று நோய்களான சார்ஸுடன் 70 சதவிகிதமும் மெர்ஸ் உடன் 50 சதவீதமும் ஒன்றுபட்டு உள்ளது. எனவே சார்ஸ் மற்றும் மெர்ஸ் ஆகிய நோய்களுக்கு செய்திருந்த களப்பணியை அடிப்படையாக கொண்டு இதற்கான தீவிரமான ஆராய்ச்சியில் இறங்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
தற்போது நிலையின்படி இந்த மருந்துகள் இன்னும் அங்கீகாரம் பெறவில்லை. ஆனால் இந்த சூழ்நிலையை உபயோகப்படுத்தி புதியதலைமுறை ஆய்வாளர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் பட்சத்தில் எதிர்காலத்திலும் இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலைகளில் ஆய்வுகள் வெகு சீக்கிரமாக நடைபெற்று தீர்வுகள் காணப்படும் என நம்பப்படுகிறது.