வட்ட வடிவில்.. சமூக இடைவெளியுடன் மெக்காவில் தொழுகை!
கொரோனா தொற்று பரவலால் மெக்காவில் குறைந்த அளவு எண்ணிக்கையில் தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்களின் புகைப்படம் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் பெரும்பான்மையான நாடுகளில் வழக்கமான செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பொதுமுடக்கத்தால் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களும் மூடப்பட்டுள்ளன.
இந்நிலையில் சவுதி அரேபியாவில் இஸ்லாமியர்களின் புனிதத்தலமாக கருதப்படும் மெக்காவில் வழக்கத்திற்கு மாறாக குறைந்த அளவிலான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.
இஸ்லாமியர்களின் முக்கிய 5 இறைக்கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுவது மெக்கா புனிதப்பயணம். வாழ்வில் ஒரு முறையாவது மெக்கா செல்வது என்பது இஸ்லாமியர்களின் கடமையாகக் கருதப்படுகிறது.
வழிபாட்டுக் காலங்களில் அரங்கம் நிறைந்து காணப்படும் மெக்காவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக குறைந்த அளவிலான நபர்கள் மட்டுமே தொழுகையில் பங்கேற்றனர்.
1.5 மீட்டர் சமூக இடைவெளியில் தொழுகையில் பங்கேற்ற பொதுமக்கள் சானிடைசர் முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தொழுகையில் பங்கெடுத்துக் கொண்டனர்.
கடந்த வருடம் 25 லட்சம் மக்கள் மெக்கா தொழுகையில் கலந்து கொண்ட நிலையில் கரோனா பரவலால் நடப்பாண்டு 10000 பேர் மட்டுமே கலந்து கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கொரோனா தொற்றால் 2020 ஆம் ஆண்டு வெளிநாட்டைச் சேர்ந்த மக்கள் மெக்கா வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.