பப்ஜி கேமை விளையாடக் கூடாதென்று தந்தை கண்டித்ததால் தற்கொலை செய்துகொண்ட மாணவன்!
பப்ஜி கேமை விளையாடக் கூடாதென்று தந்தை கண்டித்ததால் விரக்தியில் மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் வாணியம்பாடியை அடுத்து உள்ள ஆலங்காயம் கோமுட்டேரியை சேர்ந்த பெருமாள் என்பவர் வெல்டிங் ஒர்க்ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது இளைய மகன் சீனிவாசன் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நிலையில் விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து உள்ளார்.
இவர் தொடர்ந்து பப்ஜி கேமை ஆர்வத்துடன் விளையாடி வந்து உள்ளார். இந்நிலையில் நேற்று மதியம் வீடு திரும்பிய தந்தை தனது மகன் சீனிவாசிடம், “மத்திய அரசு பப்ஜி கேமிற்கு தடை விதித்து உள்ளது. அதனால் இனி அந்த கேமை விளையாடுவது தவறு அதனால் இனி நீ விளையாடக்கூடாது” என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் இருந்து செல்போனை பெருமாள் வாங்கி வைத்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
இதனால் சீனிவாசன் மனமுடைந்து தனது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அங்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.