லெபனான் வெடிவிபத்தில் சிக்கி ஒரு மாதம் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட நாய்!

லெபனான் நாட்டில் நடந்த வெடிவிபத்து நடந்து ஒரு மாதம் ஆன நிலையில், இடிபாடுகளில் சிக்கியிருந்த நாய் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் தடை செய்யப்பட்ட 2,750 டன் எடை கொண்ட அம்மோனியம் நைட்ரேட் ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. இது கடந்த மாதம் 4ம் தேதி வெடித்து சிதறியது. இந்த விபத்தால் பெய்ரூட் நகரமே உருக்குலைந்து போனது. கட்டடங்கள் இடிந்து நொறுங்கியதில் பலர் இடிபாடுகளில் சிக்கினர். இந்த வெடிவிபத்தில் சுமார் 190 பேர் உயிரிழந்தனர்.
வெடிவிபத்து நடந்து ஒரு மாதம் ஆனநிலையில், ஜெம்மைஸ் என்ற இடத்தில் கட்டட இடிபாடுகளை மீட்புப் படையினர் அகற்றி கொண்டிருந்த போது, அதில் நாய் ஒன்று அசைவதை கண்டறிந்தனர். பல மணிநேர மீட்பு பணிக்கு பிறகு நாய் பத்திரமாக மீட்கப்பட்டது. வெடிவிபத்து நடந்து ஒரு மாதமாக இடிபாடுகளில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட நாயை கண்டு பலரும் வியந்தனர்.