திருமண மண்டபமாக மாறும் ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோ

சினிமா தயாரிப்புகளை நீண்ட காலமாக நிறுத்திவிட்ட ஏ.வி.எம் நிறுவனம், அதன் பிரபலமான ஏ.வி.எம் கார்டன் ஸ்டூடியோவை திருமணம் மண்டபமாக மாற்ற முடிவு செய்துள்ளது.
சென்னையில் ஏவிஎம் ராஜேஸ்வரி, அகஸ்தியா உள்ளிட்ட திரையரங்குகள் மூடப்படுவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கெனவே, ஏவிஎம் வளாகத்தில் ஒரு பகுதி அடுக்குமாடிக் குடியிருப்பு, ஒரு பகுதி மருத்துவமனை என்று மாறிவிட்டது.
விரைவில் ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் இடிக்கப்படவுள்ளது. தற்போது ஏவிஎம் வளாகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஏவிஎம் கார்டனும் திருமண மண்டபமாக மாறவுள்ளது. இந்த கார்டனில் டப்பிங் ஸ்டுடியோ தற்போது இயங்கி வருகிறது. அதற்கு முன்பாக பல வரவேற்பு பெற்ற படங்களின் படப்பிடிப்பு ஏவிஎம் கார்டனில் நடைபெற்றுள்ளது.
அங்கு இயங்கி வரும் டப்பிங் ஸ்டுடியோவில் கிட்டத்தட்ட தமிழ்த் திரையுலகின் அனைத்து நடிகர்களுமே டப்பிங் பேசியிருப்பார்கள். இந்நிலையில் ஏவிஎம் கார்டன் ஸ்டுடியோ திருமண மண்டபமாக மாறவுள்ள தகவல், தமிழ்த் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.