“பாகிஸ்தானுக்கு இனி கண்டிப்பா ஆயுதம் வழங்க கூடாது” ரஷ்யாவிடம் கறார் காட்டிய ராஜ்நாத் சிங்!
இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்யக் கூடாது என்ற கோரிக்கையை ரஷ்ய அமைச்சர் சொயிகு ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. எஸ்.சி.ஓ. நாடுகளின் ராணுவ அமைச்சர்கள் மாநாடு ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடக்கிறது. இதில் அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்தியா பங்கேற்றுள்ளது.
லடாக் எல்லையில் சீனாவின் நடவடிக்கையால் பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியதுவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ பங்கே கூட்டத்தில் பங்கேற்றோர். அப்போது உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், “உலக மக்கள்தொகையில் 40 சதவீதத்திற்கும் அதிகமானோர் வசிக்கும் எஸ்சிஓ உறுப்பு நாடுகளில் அமைதி நிலவவும், பாதுகாப்பு ஏற்படவும் நம்பிக்கை தேவை” என்று கூறினார்.
இதனையடுத்து ராஜ்நாத் சிங், ரஷ்ய ராணுவ அமைச்சர் சொயிகுவை சந்தித்துப் பேசினார். சுமார் ஒருமணி நேரம் நடந்த இந்தச் சந்திப்பில் இருநாடுகளுக்கிடையேயான பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்டவை ஆலோசிக்கப்பட்டன. அப்போது பயங்கரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானுக்கு ஆயுத சப்ளை செய்யக் கூடாது என்று ராஜ்நாத் சிங் கேட்டுக்கொண்டதாகவும், அதனை ரஷ்ய அமைச்சர் சொயிகு ஏற்றுக் கொண்டார் எனவும் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்தச் சந்திப்பு பற்றி ராஜ்நாத் சிங் தன் ட்விட்டரில், “ரஷ்ய ராணுவ அமைச்சருடன் நடத்திய பேச்சு வார்த்தை திருப்திகரமாக இருந்தது. ராணுவ ஒத்துழைப்பு, ராணுவ பலப்படுத்தம் உள்ளிட்ட விஷயங்களை விவாதித்தோம். மேலும் இந்தச் சந்திப்பில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளின் அதி நவீன வடிவமான ஏகே 47-203 ரகத் துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பதற்கான பேச்சு வார்த்தையை இந்தியாவும் ரஷ்யாவும் இறுதி செய்துள்ளன. இந்திய ராணுவத்துக்கு 7 லட்சத்து 70 ஆயிரம் துப்பாக்கிகள் தேவைப்படுகின்றன. இவற்றில் ஒரு லட்சம் துப்பாக்கிகள் இறக்குமதி செய்யப்படும். மீதித் துப்பாக்கிகளை உத்தரப் பிரதேசத்தில் உள்ள கொர்வா தொழிற்சாலையில் இந்தியா-ரஷ்யா கூட்டாகச் சேர்ந்து தயாரிக்கும்” என்று தெரிவித்துள்ளார்.