ஒரே ஒரு பெண் பயணிக்காக டெல்லியிலிருந்து ராஞ்சி வந்த ராஜஸ்தானி எக்ஸ்பிரஸ்!

டில்லியில் இருந்து ராஞ்சிக்கு ஒரே ஒரு பெண் பயணியுடன் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டுள்ளது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
டில்லியில் இருந்து ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு சுமார் 930 பயணிகளுடன் புறப்பட்ட ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில், டால்டோன்கஞ்ச் பகுதி அருகே சென்றபோது டானா என்ற அமைப்பினர் தீடீரென ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமானதால் ரயிலை மேற்கொண்டு இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு, அதில் பயணிகள் அனைவரும் ராஞ்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் அதில் அனன்யா என்ற சட்டக்கல்லூரி மாணவி மட்டும் பஸ்சில் செல்ல மறுப்பு தெரிவித்து, ரயிலில் செல்வதில் உறுதியாக இருந்துள்ளார்.இதனால் வேறு வழியின்றி ரயில்வே நிர்வாகம், அந்த ஒரு பெண் பயணியுடன் மாற்று வழியில் ரயிலை ராஞ்சிக்கு இயக்கியது. அதாவது வழக்கமான பாதையை விட 225 கிலோ மீட்டர் தூரம் அதிகமாக பயணித்து ராஞ்சி சென்றது.
இது குறித்து அந்த மாணவி அனன்யா கூறுகையில், “பஸ் அல்லது டாக்ஸி மூலம் ராஞ்சி செல்லுமாறு அதிகாரிகள் கட்டாயப்படுத்தினர். ஆனால் நான் ரயில் பயணத்துக்கு டிக்கெட் எடுத்திருக்கிறேன். ஏன் பேருந்தில் செல்ல வேண்டும் என கேட்டேன். பின்னர் இது தொடர்பாக இந்திய ரயில்வேயின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டேன். தற்போது ராஞ்சி வந்தடைந்துள்ளேன்,” என்றார்.