தமிழகத்தில் திரையரங்குகள் விரைவில் திறக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தகவல்!

தமிழகத்தில் திரையரங்குகளை திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியுள்ளார்.
கொரோனா பரவல் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மாவட்டங்களுக்குள் பொதுப்போக்குவரத்து செயல்பாடு தொடங்கிவிட்ட நிலையில், தற்போது 7ம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் பேருந்து, ரயில் போக்குவரத்து தொடங்கப்படவுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு தளர்வில் சினிமா மற்றும் சின்னத்திரை படப்படிப்புகளை குறைந்த எண்ணிக்கை கொண்ட ஊழியர்களை கொண்டு நடத்திக்கொள்ளலாம் என அரசு அறிவித்தது.
ஆனால் சினிமா தியேட்டர்கள் இயங்க அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் சூர்யா உள்ளிட்ட பல நடிகர்களின் படங்கள் ஓ.டி.டி.யில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனவே, திரையரங்குகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று திரைத்துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “தியேட்டர்கள் திறப்பது குறித்து விரைவில் நல்ல முடிவு வரும். நாளை மறுநாள் திரைத்துறை பிரதிநிதிகள் முதல்வரை சந்திக்க உள்ளனர். திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பாரதிராஜா ஆகியோர் முதல்வரை சந்தித்து கொரோனா காலத்தில் இந்தியாவிலே முதலாவதாக படப்பிடிப்பிற்கு அனுமதியளித்ததற்க்கும், திரைப்பட தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்களை வழங்கியதற்கும் நன்றி தெரிவிக்கவுள்ளனர்” என்று கூறியுள்ளார்.