சுங்க அனுமதி பெற மறந்ததால்… வாங்கியவர் கண்முன்னே எரிக்கப்பட்ட 14 லட்ச ரூபாய் மதிப்புள்ள ஹேன்ட்பேக்!
உரிய அனுமதி பெறாததால் 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஹேண்ட் பேக்கை சுங்கத் துறை அதிகாரிகள் அழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விலங்குகளின் தோலில் செய்யப்பட்ட பொருட்களை வாங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதி பெற வேண்டும், அவற்றை செய்யத் தவறினால் அது சட்ட விரோதமானவை என்று கருதப்படும்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பிரான்சில் உள்ள ஒரு கடையில் இருந்து ஆன்லைனில் முதலை தோலால் செய்யப்பட்ட ஹேண்ட் பேக் ஒன்றை வாங்கியிருந்தார். வாங்கிய பேக்கிற்காக ஐரோப்பாவிலிருந்து ஏற்றுமதி உரிமம் பெற்றிருந்த அந்த பெண் ஆஸ்திரேலிய நாட்டிற்கான உரிய சுங்க அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால், அந்த பெண்ணின் ஹேண்ட் பேக்கை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள், அதனை அழித்துள்ளனர். அந்த ஹேண்ட் பேக்கின் விலை 14 லட்சம் என்பதால் தற்போது அந்த சம்பவம் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது. சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், அந்த ஹேண்ட் பேக் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து சுங்கத்துறை அதிகாரி பேசியபோது, “அந்த பெண் 70 டாலர் ( சுமார் 3700 ரூபாய்) பணம் கட்டி ஆஸ்திரேலிய சுங்க அனுமதி பெறத் தவறிவிட்டார். அதனால்தான் அந்த பெண்ணின் ஹேண்ட் பேக் அழிக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.