“மாணவர்களுக்கு இனி ஆன்லைன் வகுப்பு கிடையாது” தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கட்டாயம் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வி.ஜி. தாமஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில், சில தனியார் பள்ளிகள் ஆன்லைனில் பாடங்களை நடத்தி வரும் நிலையில், அரசு பள்ளிகளிலும் பாடங்களை நடத்த அரசு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி கடந்த ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல், 14 தொலைக்காட்சிகளின் மூலம் வகுப்பு வாரியாக பாடம் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை செய்துள்ளது.
இதனிடையே, மாணவர்களிடம் இணையம் கற்க ஏற்ற சூழல் நிலவுகிறதா? என்பதை கண்டறிய தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், 95% மாணவர்களிடம் ஆன்லைன் கல்வி மூலம் கல்வி கற்பதற்கான ஏற்ற சூழல் இல்லை என்பது தெரியவந்தது. மேலும், தமிழகத்தில் 1,740 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், 3% மாணவர்களிடம் மட்டுமே ஸ்மார்ட் போன் இருப்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு கட்டாயம் கிடையாது என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் வி.ஜி. தாமஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆன்லைன் வழி கல்வியை பள்ளி மாணவர்களுக்கு எந்த காரணத்துக் கொண்டும் கட்டாயப்படுத்தக் கூடாது. பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தினால் மின்னஞ்சல் மூலம் பெற்றோர் புகார் தெரிவிக்கலாம். மேலும், ஆன்லைன் வகுப்புகளுக்காக வருகைப் பதிவேடு, மதிப்பெண்களை கணக்கிடுவது கூடாது. அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் கல்வியை கண்காணிக்க ஆலோசர்களை நியமிக்க வேண்டும்” என்று பள்ளிக்கல்வி ஆணையர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.