ராமநாதபுர மக்களுக்கு நன்றி தெரிவித்த வருண்குமார் ஐபிஎஸ்!

தமிழகத்தில் அண்மையில் ராமநாதபுரத்தில் ஏற்பட்ட பிரச்னையை தொடர்ந்து காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட வருண்குமார், சென்னை தானியங்கி மற்றும் கண்னி மயமாக்கல் பிரிவு எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இராமநாதபுரத்தில் சமீபத்தில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டார். பாஜகவின் எச்.ராஜா உள்ளிட்டோர் இக்கொலை தொடர்பாக மதம் சார்ந்த கருத்துகளை பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை சார்பில், தனிப்பட்ட பிரச்னை காரணமாகவும், இருதரப்பு பிரச்சனை காரணமாகவும் கொலை நடந்ததாகவும், இதில் மதப்பிரச்னை இல்லை எனவும் கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து அரசியல் அழுத்தங்களால் காரணமாக தான் வருண்குமார் ஐபிஎஸ் இடமாற்றம் செய்யப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் விமர்சனம் முன் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சென்னைக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து வருண் குமார் ஐபிஎஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றினை பதிவிட்டுள்ளார். அதில், “மிக்க நன்றி ராமநாதபுரம். நான் நிறைய கற்றுக்கொண்டேன். காவல் துறையில், என் வாழ்க்கையின் சிறந்த நாட்கள் இவை. எனது குடும்பம் இங்கு இருப்பதால் சென்னைக்கு திரும்பி வருவதில் மகிழ்ச்சி. அனைத்து நலம் விரும்பிகளுக்கும் எனது மனமார்ந்த நன்றி. இணைந்திருங்கள், தொடர்பில் இருங்கள்.” இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.