“கொரோனோ பரவலால் ஏற்பட்டுள்ள சூழலில், பிரிவு உபசார விழாவில் பங்கேற்க மனசாட்சி இடம் அளிக்கவில்லை” – சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஸ்ரா

கொரோனோ பரவலால் ஏற்பட்டுள்ள துயர நிலைக்கு மத்தியில், தனது பிரிவு உபசார விழாவில் பங்கேற்க மனசாட்சி இடம் அளிக்கவில்லை என சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.
சுப்ரீம் கோர்ட் நீதிபதி அருண் மிஸ்ரா நாளை (செப்., 2) ஓய்வு பெறுகிறார். சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் சங்கம் ஓய்வு பெறும் நீதிபதிக்கு பிரிவு உபசார விழா நடத்துவது வழக்கம். அதன்படி, அருண் மிஸ்ராவுக்கு பிரிவு உபசார விழா அழைப்பிதழ் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர் சங்க தலைவருக்கு, நீதிபதி அருண் மிஸ்ரா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், அவர் தெரிவித்திருப்பதாவது: நீதித்துறையின் தாயாக வழக்கறிஞர் சங்கத்தை எப்போதும் கருதி வருகிறேன். பிரிவு உபசார விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கவே செய்கிறது. ஆனால், கொரோனோ பரவலால் ஏற்பட்டுள்ள சூழலில், பிரிவு உபசார விழாவில் பங்கேற்க மனசாட்சி இடம் அளிக்கவில்லை.
எனவே பிரிவு உபசார விழாவில் பங்கேற்க முடியாது. இதற்காக பொருத்தருளுங்கள். கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, நாடு இயல்புநிலை நிலவும்போது, வழக்கறிஞர் சங்கத்துக்கு வருகை தந்து எனது மரியாதையை செலுத்துவேன். இவ்வாறு கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.