பட்லரின் அதிரடி ஆட்டத்தால் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி!
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசாத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி 20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். டேவிட் வார்னர் ரன் ஏதும் எடுக்காமலும், அலெக்ஸ் கேரி 2 ரன்னுக்கும் ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 10 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனால், அந்த அணி 30 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதையடுத்து, பின்ச் மற்றும் ஸ்டாய்னிஸ் பாட்னர்ஷிப் அமைத்து விளையாடினர். எனினும், இந்த இணையும் ஒரு ஓவர் இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. பின்ச் 40 ரன்களும், ஸ்டாய்னிஸ் 35 ரன்களும் எடுத்தனர். மேக்ஸ்வெல் 26, அகார் 23 என ஓரளவு ரன் சேர்த்து ஆட்டமிழக்க, கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் அதிரடி காட்டி பவுண்டரி மற்றும் சிக்ஸர் அடித்தார். இதன்மூலம், நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்தது.
158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய இங்கிலாந்து அணி 2.5 ஆவது ஓவரிலேயே ஜானி பையர்ஸ்டோவ் விக்கெட்டை பறிகொடுத்தது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் ஜானி பேர்ஸ்டோவ் ஹிட் விக்கெட் ஆனதுதான். இதன்மூலம் சர்வதேச டி 20 போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஹிட் விக்கெட் ஆன 5 ஆவது வீரரானார் ஜானி பேர்ஸ்டோவ்.
பின் பட்லருடன் மலான் இணைந்தார். இந்த இணை சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைக்க, இங்கிலாந்துக்குத் தேவையான ரன் ரேட் நெருக்கடிக்குள்ளாகாமல் இருந்தது. 2-வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்த நிலையில் மலான் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். எனினும், பட்லர் அரைசதம் கடந்து நம்பிக்கையளித்து வந்தார். அடுத்து களமிறங்கிய பேண்டன் (2), மார்கன் (7) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால், ஆட்டத்தில் லேசான விறுவிறுப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 19-ஓவரில் மொயீன் அலி சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து வெற்றி இலக்கை எளிதாக்கினார். அதே ஓவரில் பட்லரும் இமாலய சிக்ஸர் அடிக்க இங்கிலாந்து வெற்றி இலக்கை அடைந்தது. 18.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து, இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பட்லர் 54 பந்துகளில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்மூலம், 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் இங்கிலாந்து 2-0 என தொடரை வென்று முன்னிலை வகிக்கிறது.