“ஏஐசிடிஇ சார்பில் அரியர் மாணவர்கள் தேர்ச்சி தொடர்பாக எந்த கடிதமும் வரவில்லை” கே.பி.அன்பழகன் பேட்டி!

ஏஐசிடிஇ சார்பில் அரியர் தேர்வுகள் தொடர்பாக தமிழக அரசுக்கு எந்த கடிதமும் வரவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இறுதியாண்டு மாணவர்கள் தவிர அரியர் தேர்வு கட்டணம் செலுத்திய கலை மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இதற்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு மின்னஞ்சல் அனுப்பியதாக கூறப்பட்டது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா, மாணவர்களுக்கு தேர்வு நடத்தி தான் தேர்ச்சியை அறிவிக்க வேண்டும் என்பதே ஏஐசிடிஇ – இன் விதியாக இருப்பதாகவும் ஏஐசிடிஇ கடிதம் எழுதியதாகவும் அவர் கூறினார்.
ஆனால் அமைச்சர் அன்பழகன், இது ஏஐசிடிஇ இன் கருத்து இல்லை, சூரப்பா தனது கருத்தை திணிக்க முயல்வதாக கூறியிருந்தார். இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன், “ஏஐசிடிஇ சார்பில் அரியர் தேர்வுகள் தொடர்பாக தமிழக அரசுக்கு எந்த கடிதமும் வரவில்லை. யுஜிசி மற்றும் ஏஐசிடிஇ விதிகளை தமிழக அரசு முழுமையாக பின்பற்றும். அரியர் தேர்வுகளுக்கு தமிழக அரசு விலக்கு அளித்தது குறித்து அண்ணா பல்கலைக்கழகம், அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி இயக்குநகரத்திற்கு எந்தவித கோரிக்கை முன் வைத்தார்கள் என்பது தொடர்பாக விளக்கத்தை அண்ணா பல்கலைக்கழகம் தான் தெரிவிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.