ஒரு நோயாளி கூட பயன்பெறாத ரயில் பெட்டிகளுக்கு ரூ.156 கோடி செலவு!
கொரோனா பரவல் அதிகரித்த போது ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றி சிகிச்சை அளிக்க போகிறோம் என மத்திய அரசு கிளம்பியது. ஆனால் அது சரிவராததால் மீண்டும் அதனை பயணிகள் பெட்டியாக மாற்றுகிறது. இதற்கான செலவு ரூ.156 கோடி என்கின்றனர்.
ஏப்ரல் மாதம் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. அப்போது மருத்துவமனையில் உள்நோயாளிகள் படுக்கைகள் நிரம்பி வழியும் என்பதால் மோடி அரசு நவீனமாக (!) யோசித்து ரயில் பெட்டிகளை மருத்துவமனை வார்டுகளாக மாற்றுவது என முடிவு செய்தது.
ரயில் பெட்டியை மருத்துவமனையாக்க முடியும் என்றால், ஒரு மருத்துவமனை கட்ட ஆயிரத்தி எட்டு விதிகள் இருப்பது எதனால். அந்த குறுகிய பகுதிக்குள் ஸ்ட்ரெச்சரை கொண்டு செல்வதே கடினம். திடீரென அசம்பாவிதம் நேர்ந்தால் நோயாளிகளை வெளியேற்றுவதும் கடினம் என மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வழக்கம் போல எந்த ஆக்கப்பூர்வ அறிவுரையையும் மத்திய அரசோ, ரயில்வே அமைச்சகமோ காதில் வாங்கவில்லை. புவியீர்ப்பை கண்டுபிடித்தது ஐன்ஸ்டீன் என்றவர் தானே ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், அவரது சிந்தனை எல்லாம் வேற லெவலில் தான் இருக்கும். தற்போது கொரோனா வார்டாக மாற்றிய ரயில் பெட்டிகள் எதற்கும் பயன்படாததால் அதனை மீண்டும் பயணிகள் பெட்டியாக மாற்றி விட்டனர்.
நன்றாக இருந்த 5,200 கோச்களை உடைத்து, இடித்து கொரோனா வார்டாக மாற்றுகிறேன் என ஒரு கோச்சுக்கு 2 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளனர். பின்னர் அது எதற்கும் உபயோகம் இல்லை என மீண்டும் பயணிகள் பெட்டியாக மாற்றியதற்கு பெட்டிக்கு தலா ஒரு லட்ச ரூபாய் வரை செலவிட்டுள்ளனர்.
முட்டாள் தனமான யோசனையால் மக்கள் வரிப்பணம் ரூ.156 கோடி ஊழல் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தான் தற்போது மத்திய அரசு துறைகளில் புதிய பதவிகளை நிரப்ப வேண்டாம். காலண்டர், டைரி அச்சடிக்க வேண்டாம், நிறுவன தினங்கள் கொண்டாட வேண்டாம், பூ வேண்டாம், பொக்கே வேண்டாம் என சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
இதனை தான் நம்மூர்களில் சொல்வார்கள் ‘பூசணிக்காய் போன இடம் தெரியாது. கடுகு போனது பற்றி ஆராய்வார்’ என்று.