தொடரும் தற்கொலைகள்…! ஆன்லைன் வகுப்பு புரியாததால் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி!

ஆன்லைன் வகுப்பு புரியாததால் திருச்சியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் பாலக்கரை சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகள் லலிதா திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு இளங்கலை ஆங்கிலம் பட்ட படிப்பை படித்து வந்த நிலையில், கொரோனா காரணமாக கல்லூரி சார்பில் நடத்தப்பட்டு வந்த ஆன்லைன் வகுப்பில் பயின்று வந்தார்.
பன்னிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்ற லலிதாவுக்கு, ஆன்லைன் வழியாக நடத்தப்படும் ஆங்கில வகுப்பு தனக்கு புரியவில்லை என பெற்றோரிடம் கூறி வருத்தப்பட்டு வந்துள்ளார். தனக்கு ஆன்லைன் வழியாக நடத்தப்படும் ஆங்கில வகுப்பு புரியவில்லை என ஆசிரியர்களிடம் கூறிய போதும், அவர்கள் இன்னும் சில நாட்களில் புரிந்து விடும் என லலிதாவிடம் கூறியுள்ளனர். இதையடுத்து படிப்பில் கவனம் செலுத்த முடியாத விரக்தியில் இருந்த அவர் வீட்டில் எல்லோரும் தூங்கி கொண்டிருந்த சமயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
லலிதா தூக்கு போட்டு கொண்டதை சற்று நேரத்தில் பார்த்த அவரது தம்பி அதிர்ச்சியில் சத்தம் போட, பெற்றோர்கள் லலிதாவின் உடலை இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் லலிதா ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்பு புரியாமல் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக வழக்கு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.