“இந்தியா பொருளாதாரம் மீள அரசு இந்த நடவடிக்கைகளை கண்டிப்பாக செய்தாக வேண்டும்!” ரகுராம் ராஜன்!

இந்தியாவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஒரு தூண்டுதல் அவசியம் என ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதிய கட்டுரையில் கூறியுள்ளதாவது: “இந்தியாவின் ஜிடிபி மைனஸ் 23.9 சதவீதம் என்ற நிலைக்கு சென்றது அனைவரையும் அச்சமடைய செய்துள்ளது. நிவாரண நடவடிக்கைகள் ஏதும் இல்லையென்றால், நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா மற்றும் இத்தாலி நாடுகளின் பொருளாதார நிலையை விட இந்தியாவின் நிலை மோசமாக உள்ளது.
இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருகிறது. இதனால், உணவகம் உள்ளிட்ட துறைகளில் வேலைவாய்ப்பு என்பது மிகவும் குறைவாக தான் இருக்கும். இதனால், அரசு நிவாரணம் அளிக்க வேண்டியது அவசியம். இந்தியாவிற்கு வலிமையான வளர்ச்சி தேவைப்படுகிறது. அது இளைஞர்களின் விருப்பத்தை மட்டும் பூர்த்தி செய்வதாக மட்டுமல்லாமல், நமது அண்டை நாடுகளுக்கும் உதவும் வகையிலும் இருக்க வேண்டும்.
அரசும், அதிகாரிகளும் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அவர்கள் அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மத்திய அரசும், பொதுத்துறை நிறுவனங்களும் பாக்கி வைத்துள்ள நிலுவை தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும்.” இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.