“மருத்துவராகவே தொடர விரும்புகிறேன்” வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மருத்துவர் கஃபீல் கான்!

காங்கிரஸில் சேரப்போகிறார் என்ற வதந்திகள் வந்த நிலையில் தான் எந்தக் கட்சியிலும் சேரப்போவதில்லை, தொடர்ந்து மருத்துவராகவே சேவை செய்யப் போகிறேன் என்று கோரக்பூர் மருத்துவர் கஃபீல் கான் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து அலிகார் பல்கலைக்கழக்ததில் பேசியதற்காக கஃபீல்கானை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உத்தரப்பிரதேச அரசு கைது செய்தது. பின் அந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், “கஃபீல்கான் சட்டத்துக்குவிரோதமாகவோ, வன்முறையைத் தூண்டும் விதத்திலோ பேசவில்லை,அவர் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் நடவடிக்கை எடுக்க முகாந்திரம் இல்லை” எனக் கூறி ரத்து செய்து அவரை விடுவித்தது.

இந்நிலையில், மருத்துவர் கஃபீல் கான் அரசியலில் ஈடுபடப்போகிறார், காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார் என சமூக வலைத்தளங்களில் பல்வேறு செய்திகள் உலா வந்தன.

இதுகுறித்து ராஜஸ்தானில் தற்போது தங்கியிருக்கும் மருத்துவர் கஃபீல்கான் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “நான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை. அவ்வாறு வரும் செய்திகள் அனைத்தும் பொய்யானவை. நான் ஒரு மருத்துவர் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். மக்களுக்கு சேவை செய்யும் மருத்துவர் தொழிலில்தான் தொடர்ந்து இருப்பேன்.

பிஹாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து என்னால் முடிந்த உதவிகளைச் செய்ய விரும்புகிறேன். அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் என்னை உத்திரபிரதேச அரசு விடுவிக்காத நிலையில், என்னை வேறு ஒரு வழக்கில் கைது செய்ய தயாராகி வருவதாக அச்சமடைந்தேன்.

அப்போது காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, தலையிட்டு எனக்கு மனிதநேய அடிப்படையில் உதவி செய்தார். அவர் செய்த உதவிக்காக நான் காங்கிரஸ் கட்சியில் சேர்வேன் என்று நான் கூறவில்லை, அவரும் அதை எதிர்பார்க்கவில்லை. பிரியங்கா காந்தியிடம் நான் பேசியபோது, நாங்கள் இருவரும் எந்தவிதமான அரசியல் குறித்தும் பேசவில்லை. அவரும் என்னை காங்கிரஸ் கட்சியில் சேருமாறு அழைக்கவும் இல்லை.

ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சி அரசு இருக்கிறது. மதுராவிலிருந்து பாரத்பூருக்கு 20 நிமிடங்களில் சென்றுவிடலாம். ஆதலால், பாரத்பூருக்கு செல்லுங்கள் என்று என்னிடம் பிரியங்கா காந்தி கேட்டுக்கொண்டார். அவரின் மனிதநேய உதவிக்கும், எனக்கு பாதுகாப்பு அளிக்க முன்வந்தமைக்கும் நன்றி தெரிவித்தேன்”’ எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு சமீபத்தில் கஃபீல்கான் கடிதம் எழுதினார். அதில், கோரக்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தன்னை மீண்டும் பணியில் அமர்த்துமாறும், தன் மீதான எந்தக் குற்றச்சாட்டும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகிறேன்’ எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x