ஒலியை விட 6 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகனை சோதனையில் இந்தியா வெற்றி!

ஹைப்பர்சோனிக் தொழில்நுட்பத்தை உருவாக்கி வெற்றிகரமாக சோதனை செய்து அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா நான்காவது நாடாக மாறியது.
முழுவதும் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹைப்பர்சோனிக் தொழில்நுட்ப விமான சோதனை வாகனத்தை (எச்எஸ்டிடிவி) வெற்றிகரமாக இந்தியா பரிசோதித்துள்ளது. இது எதிர்காலத்தில் நீண்ட தூர ஏவுகணை அமைப்புகள் மற்றும் வான்வழி தளங்களை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும், ஹைப்பர்சோனிக் உந்துவிசை தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்ட எச்.எஸ்.டி.டி.வி, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (டி.ஆர்.டி.ஓ) உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எச்எஸ்டிடிவியின் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்திய டிஆர்டிஓவுக்கு பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், ‘இது மைல்கல் சாதனை’ எனக் கூறி வாழ்த்துத் தெரிவித்தார்.
“ஆத்மநிர்பர் பாரத் குறித்த பிரதமரின் பார்வையை உணர்ந்து கொள்வதற்கான இந்த மைல்கல் சாதனைக்கு நான் டிஆர்டிஓவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திட்டத்துடன் தொடர்புடைய விஞ்ஞானிகளுடன் பேசினேன். இந்த மாபெரும் சாதனைக்கு அவர்களை வாழ்த்தினேன். அவர்களால் இந்தியா பெருமை கொள்கிறது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

மேலும், டி.ஆர்.டி.ஓ இந்தியா இன்று வெற்றிகரமாக ஹைப்பர்சோனிக் டெக்னாலஜி டெமோன்ட்ரேட்டர் வாகனத்தை உள்நாட்டில் உருவாக்கிய ஸ்க்ராம்ஜெட் உந்துவிசை முறையைப் பயன்படுத்தி வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த வெற்றியின் மூலம், அனைத்து முக்கியமான தொழில்நுட்பங்களும் இப்போது அடுத்த கட்டத்திற்கு முன்னேற முடியும் என்று நிருபிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.