“நெருக்கடி காலத்தில் SBI வங்கியின் விருப்ப ஓய்வு திட்டம் ஏற்புடையதல்ல!” ப.சிதம்பரம் விமர்சனம்!

பொருளாதார நெருக்கடி காலத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் விருப்ப ஓய்வு திட்டம் ஏற்புடையதல்ல என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “பொருளாதார மீட்பு நடவடிக்கையாக விருப்ப ஓய்வு திட்டத்தை செயல்படுத்த எஸ்பிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதாக கூறியுள்ளார். இது சாதாரண காலங்களில் விவாதத்திற்குரிய விஷயமாக மட்டுமே இருந்திருக்கும் என்றும் ஆனால், கொரோனாவால் பொருளாதாரம் சரிந்துள்ள அசாதாரண நேரத்தில் இது கொடூரமான முயற்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வேலைவாய்ப்புக்காக கடனுதவி வழங்கும் நாட்டின் மிகப் பெரிய வங்கியின் நிலை இதுவென்றால், மற்ற சிறு, குறு நிறுவனங்களின் நிலையை கற்பனை செய்து பாருங்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விருப்ப ஓய்வு என்ற அறிவிப்பு என்றாலும், இதில் ஊழியர்களை கட்டாயமாக ஓய்வு பெறச் செய்யும் அழுத்தமும் மறைந்துள்ளது. முறையான விருப்ப ஓய்விற்கான விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில், 30,190 ஊழியர்கள் இதற்கு தகுதியானவர்கள் என்று ஏன் அறிவிக்கப்பட வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த ஆண்டு பாரத ஸ்டேட் வங்கி ஊழியர்களின் எண்ணிக்கை 2.57 லட்சமாக இருந்த நிலையில் தற்போது அது கடந்த மார்ச் மாதத்தில் 2.49 லட்சமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.